எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முறைகேடு புகாரில் சிக்கிய, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் - ஏப்., மாதம் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது, வினாத்தாள் வெளியானது, குறிப்பிட்ட வினாவுக்கான விடை வெளியானது, தேர்வின்போது மாணவர்கள் கலந்து பேச அனுமதித்தது உட்பட பல பள்ளிகள் மீது புகார் எழுந்தது. தேர்வுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.
குற்றச்சாட்டுக்கு ஆளான பள்ளியில் மாணவர்கள் எழுதிய விடைத்தாள், குறிப்பிட்ட ஆசிரியர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்பட்ட வகுப்பறையில் உள்ள மாணவர்களின் வினாத்தாள், கல்வித்துறை விசாரணை அறிக்கை, கல்வித்துறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், அந்தியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட, நால்வர், பவானி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதுகலை ஆசிரியர்கள் இருவர் உட்பட, நால்வர் என, எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று மாநில அளவில் பல பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு சஸ்பெண்ட் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த சஸ்பெண்ட் விவகாரம், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி, கல்வித்துறையினர் கூறுகையில், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், ரகசியம் காக்கப்படுகிறது. தவிர, சி.இ.ஓ., அலுவலகத்துக்கு பட்டியலை மட்டும் அனுப்பிவிட்டு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு நகல் வழங்கப்பட்டு, பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இப்பிரச்னை முன்னதாக தெரிவிக்கப்பட்டால், ஆசிரியர் சங்கங்கள், தனியாக ஆசிரியர்கள் நீதிமன்றத்தை அணுகி, தடை உத்தரவு பெறும் நிலை ஏற்படும். எனவே, அதற்கு வாய்ப்பு வழங்காமல், ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது என்றனர். இதுபற்றி, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், வாட்ஸ் ஆப் மூலம் தகவல் வந்ததாக அறிந்தேன்.
எங்களுக்கு அரசு தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை. ஒருவேளை நேரடியாக, ஆர்டர் வழங்கி விட்டார்களோ என தெரியவில்லை. இதுபோன்ற பிரச்னையை, சென்னையில் தான் தெரிவிப்பர். எங்களுக்கு தகவல் வரவில்லை, என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.