Pages

Tuesday, July 26, 2016

"நீட்' தேர்வு வினாத்தாள் கடினம்: தேர்வர்கள் கருத்து

"நீட்' (தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு) தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்திய 2-ஆம் கட்டத் தேர்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர்.


தமிழகத்தின் ஒரே மையமான சென்னையில் 21 தேர்வுக் கூடங்களில் நடைபெற்ற தேர்வை எழுத 14,600 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 90 சதவீதம் பேர் தேர்வு எழுதினர். மே 1-இல் நடைபெற்ற தேர்வை எழுதியவர்களும் 2-ஆம் கட்டத் தேர்விலும் பங்கேற்றனர். ஆனால், இறுதியாக எழுதிய தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்தப்படும்.


அதிக கட்டுப்பாடுகள்: 2015-இல் நடைபெற்ற தேர்வின்போது, மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி தேர்வர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதால் மறுதேர்வு நடத்தப்பட்டது. அதனால், இந்தத் தேர்வில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பேனா, பென்சில், கைக்கடிகாரம், மின்சாதனப் பெருள்கள், செல்லிடப்பேசிகள், கால்குலேட்டர் போன்றவை தேர்வுக் கூடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. ஷூ, வளையல், கம்மல், செயின், ஹேர்பின் ஆகியவற்றை அணிந்துவர அனுமதி அளிக்கப்படவில்லை. காலை 9.30-க்கு மேலாக வந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு கடினமாக இருந்தது என கருத்து: முதல் கட்டத் தேர்வை விட 2-ஆம் கட்டத் தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

இயற்பியலில் சில கணக்குகள் மிகவும் கடினமாகவும், வேதியியலில் சில கேள்விகளுக்கு விடை காண அதிக நேரமானதாகவும், உயிரியலில் கேள்விகள் சற்று எளிதாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 17-இல் முடிவு வெளியீடு: "தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 17-இல் வெளியிடப்படும். இதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் நிரப்பப்படும். மீதமுள்ளவை மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படும்.

பின்னர், தமிழகத்தில் 2-ஆம் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும்' என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வு ஏன்? அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு "நீட்' தேர்வை நடத்தியே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

அதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி நிரப்பப்பட்டன. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை "நீட் தேர்வின் மூலமே நிரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.