Pages

Saturday, July 2, 2016

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு : 8 லட்சம் பேர் ஓராண்டாக காத்திருப்பு

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிந்து, ஒரு ஆண்டு முடிந்த பின்னரும் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக உள்ளது. இதனால், தேர்வு எழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் உள்ளனர். அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.


தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு காலியிடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில் நேர்முக தேர்வு நடத்தி, அந்த மதிப்பெண்படி, பணி நியமனம் வழங்க அரசு திட்டமிட்டிருந்தது. நேர்முகத் தேர்வில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எனப்படும், 'சீனியாரிட்டி'க்கு - 10 மதிப்பெண்; உயர் கல்வித் தகுதிக்கு, - ஐந்து; பணி அனுபவத்துக்கு, இரண்டு; நேர்முக தேர்வு கேள்விகளுக்கு -எட்டு என, மொத்தம், 25 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கே பணி ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனால், அதிர்ச்சி அடைந்த தேர்வர்கள் பலர், 'எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடாமல் பணி நியமனத்தை முடிவு செய்தால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு ஏற்படும்' எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், எழுத்து தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கிட்டு, தேர்வு முடிவை அறிவிக்க உத்தரவிட்டது. அரசின் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்பு வந்ததால், தேர்வு நடந்து முடிந்து, ஒரு ஆண்டு முடிந்த பிறகும், தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது, தேர்வர்களிடம் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ரத்தாகுமா? : நேர்முக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தந்து, ஆய்வக உதவியாளர் பணியில் சேர்த்து விடுவதாக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் பேரம் நடத்தி, பணம் வசூலித்ததாகவும் தகவல் உள்ளது. எனவே, எழுத்து தேர்வின் முடிவு வெளியிடப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தேர்வை அறிவித்த பள்ளிக்கல்வித்துறையின், அரசு தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'எழுத்து தேர்வு முடிவு தயாராக உள்ளது. அரசு உத்தரவிட்டால், உடனடியாக வெளியிட முடியும்' என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.