Pages

Thursday, July 21, 2016

ஆசிரியர் உயிரைக் காக்க முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதிய 400 மாணவர்கள்

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆண்டுகளாக பணியாற்றி 100 சதவீதம் மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர் கல்லீரல் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரது உயிரை காக்க முதலமைச்சர் மருத்துவ உதவிக்கு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பள்ளி மாணவர்கள் 400 பேர் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதியுள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் செ.ரவிச்சந்திரன் (50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விவசாய குடும்பத்தில் பிறந்த ரவிச்சந்திரன் பட்டப்படிப்பு படித்து விலங்கியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2012 ம் ஆண்டு முதல் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். அவர் அந்தப் பள்ளிக்கு வேலைக்கு சென்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் விலங்கியல் பாடத்தில் அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் மதிப்பெண்ணும் தேர்ச்சியும் அடைந்துள்ளனர்.
அதே போல 3 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்குச் சென்றுள்ளனர். சிறந்த முறையில் பாடம் நடத்தக் கூடடிய ஆசிரியர் என்ற நற்பெயருடன் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஆசிரியர் ரவிச்சந்திரனுக்கு கடுமையான காய்சல் ஏற்பட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் காய்ச்சல் குறையவில்லை. அதனால் பல ஆய்வுகள் எடுக்கப்பட்ட போது அவரது கல்லீரல் கடும் பாதிப்பிற்குள்ளாகி சிறுநீரகம் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. தனியார் மருத்தவமனையில் பல லட்சம் ரூபாய் பணம் செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது, இந்த நிலையில் வசதியற்ற நிலையில் உள்ள ஆசிரியர் குடும்பத்தால் செலவு செய்ய முடியவில்லை.

தங்கள் பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன் கடும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதை அறிந்த கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11, 12 மாணவர்கள் 400 பேரும் தனித் தனியாக முதலமைச்சர் அவர்களுக்கு ஆசிரியர் ரவிச்சந்திரன் சிகிச்சைக் உதவி செய்து நலமுடன் மீண்டும் பள்ளிக்கு வந்து எங்களுக்கு பாடம் நடத்த மருத்தவ உதவி செய்ய வேண்டும் என்று கேட்டு கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர். 

மேலும் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆசிரியர்கள், அலுவலர்கள், கிராம பொதுமக்கள் இணைந்து முதலமைச்சருக்க ஒரு கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளில் 7 மருத்துவ மாணவர்களை உருவாக்கிய அரசு பள்ளி ஆசிரியருக்கு சிகிச்சைக்கு உதவி கேட்டு மாணவர்களும், பெற்றோர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.