Pages

Monday, June 20, 2016

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பு இன்று கலந்தாய்வு துவக்கம்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. முதல் நாளில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது.தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள், இரண்டு இ.எஸ்.ஐ., மற்றும் ஆறு சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,055 பி.டி.எஸ்., படிப்புக்கான இடங்களும் உள்ளன. இதற்கு, 25 ஆயிரத்து, 379 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தர வரிசை பட்டியல், 17ம் தேதி வெளியானது.


மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியில், இன்று துவங்குகிறது. முதல் நாளில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினர் என, சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு நடக்கிறது; 159 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு, நாளை துவங்குகிறது. 'மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளங்களில், தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

27ல் இன்ஜினியரிங்...
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, 1.35 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இரண்டு வாரங்களாக, விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்துள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான, 'ரேண்டம் எண்' என்ற சம வாய்ப்பு எண்ணை, இன்று காலை, 9:30 மணிக்கு அண்ணா பல்கலை வெளியிடுகிறது.

ரேண்டம் எண் ஏன்?
ரேண்டம் எண், மாணவர்களுக்கு மிக முக்கியத்துவம் இல்லாத எண்ணாக இருந்தாலும், தர வரிசையில், ஒரே, 'கட் ஆப்' மதிப்பெண் வரும் மாணவர்களில், முன்னுரிமை மாணவரை தேர்வு செய்ய பயன்படுகிறது. ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இருந்தால், யாருக்கு தர வரிசையில் முன்னுரிமை வழங்குவது என்ற குழப்பம் ஏற்படும். இந்த குழப்பத்தை தீர்க்க, அண்ணா பல்கலையின் அதிகாரிகள், ரேண்டம் எண்ணை பயன்படுத்துகின்றனர்.

முதலில் ஒரே, 'கட் ஆப்' கொண்ட மாணவர்களின், கணித மதிப்பெண்ணில் யார் அதிகம் என, பார்த்து முன்னுரிமை தரப்படும். அதிலும், ஒரே மாதிரி இருந்தால், இயற்பியல் மதிப்பெண், அடுத்து, நான்காவது பாடத்தின் மதிப்பெண் பார்க்கப்படும். அதிலும் ஒரே மதிப்பெண் என்றால், பிறந்த தேதியில் யார் மூத்தவர் என்று பார்க்கப்படும்.

அதிலும் சமமாக இருந்தால், 'ரேண்டம்' எண்ணில், எந்த விண்ணப்பதாரரின் எண்ணின் கூட்டுத் தொகை அதிகமாக உள்ளதோ, அந்த மாணவருக்கு முன்னுரிமை தரப்படும். இதையடுத்து, மாணவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண்ணின் படி, தர வரிசை பட்டியல், வரும், 22ல் வெளியாகும்; 24ல் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கும், 25ல், மாற்றுத் திறனாளிகளுக்கும் கவுன்சிலிங் நடக்கும். மற்ற மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு, வரும், 27ல் துவங்கும். பொது கலந்தாய்வு எத்தனை நாட்கள் நடக்கும் என்பது, தர வரிசை பட்டியல் வெளியீட்டு நாளில் அறிவிக்கப்படும்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.