Pages

Tuesday, June 14, 2016

சித்தா, ஆயுர்வேத படிப்பு: விண்ணப்பம் எப்போது?

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வு ஜூன், 20ம் தேதி துவங்குகிறது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை விண்ணப்பம் வழங்காதது, மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள், 20 சுயநிதி கல்லுாரிகள் உள்ளன. 


கலந்தாய்வு:அரசு கல்லுாரிகளில், 296 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில், 994 இடங்கள் என, 1,290 இடங்கள் உள்ளன. எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வை தொடர்ந்து, சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் கலந்தாய்வை துவக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் இழுத்தடித்து, கடைசி நேரத்தில், அவசர அவசரமாக கலந்தாய்வை நடத்தி வருகிறது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் முடிந்து, ஜூன், 20ல், முதல் கட்ட கலந்தாய்வு துவங்குகிறது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு, இதுவரை விண்ணப்பம் கூட வழங்கவில்லை.

காத்திருப்பு:இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது:அகில இந்திய பொது நுழைவு தேர்வு குழப்பத்தால், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான விண்ணப்பங்கள் குறைந்துள்ளன. இந்திய மருத்துவப் படிப்புகளில் சேர ஆர்வமாக உள்ளோம். இந்த படிப்புகளில் சேர, 'கட் - ஆப்' மதிப்பெண் இருந்தும், இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ என, ஆறு மாத காலம் காத்திருப்பது கொடுமை. கலந்தாய்வை முன்கூட்டியே நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது: 
இந்திய மருத்துவக் கல்லுாரிகளில், 'ஆயுஷ்' கவுன்சில் இப்போது தான் ஆய்வு நடத்தி வருகிறது. மாணவர் சேர்க்கைக்கான முறையான அனுமதி கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு போல் அல்லாமல் முன்கூட்டியே கலந்தாய்வை நடத்த முயற்சித்து வருகிறோம். இந்த மாத இறுதிக்குள் விண்ணப்ப வினியோகம் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.