Pages

Monday, June 6, 2016

மாணவர் சேர்க்கை சிக்கல் தீர்க்க குறைதீர் குழு:கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., உத்தரவு

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மாணவர் சேர்க்கை, புதிய கல்வியாண்டு துவக்கம் குறித்த சந்தேகங்களை போக்க, 24 மணிநேர குறைதீர் குழுவை அமைக்க, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும், 2015 - 16ம் கல்வியாண்டு முடிந்து, 2016 - 17ம் கல்வியாண்டு துவங்கியுள்ளது. கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கியுள்ளன. இன்னும் ஓரிரு வாரத்தில், கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்க உள்ளன. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புக்காக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


இதில் விருப்பமான பாடப்பிரிவு, விரும்பிய கல்லுாரி கிடைப்பதில், மாணவர்கள் பல சவால்களை சந்தித்து வருகின்றனர். தேவையான மதிப்பெண் எடுத்திருந்தும், கல்லுாரியின் மாணவர் சேர்க்கை குழுவை எப்படி அணுகுவது; விண்ணப்பங்களை எங்கே பெறுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மாணவர்களின் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், 24 மணிநேரமும் இயங்கும் குறை தீர் குழுவை நியமிக்க, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவினர், எந்த நேரமும் நேரிலும், தொலைபேசியிலும், பெற்றோர் மற்றும் மாணவரின் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டும். மேலும், மாணவர் சேர்க்கை தொடர்பான புகார்கள், கோரிக்கைகள் வந்தால் அதை உடனடியாக, கல்லுாரி, பல்கலை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய தீர்வை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும் என்றும், யு.ஜி.சி., உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.