Pages

Friday, June 3, 2016

ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மறுப்பு: தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்குரிய கட்டணத்தை தமிழக அரசே செலுத்திவிடும் என கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்த உத்தரவைப் பின்பற்றுவது இல்லை. பள்ளியில் விண்ணப்பம் வாங்கச் செல்லும் போதே அரசு ஒதுக்கீடு முடிந்துவிட்டது என்று கூறுகின்றனர். 


அரசின் ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்ட மாணவர்கள் யார் எனக்கேட்டால் பதில் சொல்ல மறுக்கின்றனர் என சென்னை மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.
 மேலும் அவர் கூறுகையில், பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், நிர்வாகிகள் தனது ஊழியர்களின் பிள்ளைகளின் பெயரையும், தனக்கு நெருக்கமானவர்களின் பிள்ளைகளின் பெயர்களையும் குறிப்பிட்டு அரசிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர் என்றும் கூறுகிறார்.

அரசின் உதவிபெற்ற பயனாளி மாணவர்கள் யார் என்ற விவரம், மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய முழு முகவரி, ஏழை மாணவர் என்பதற்கு ஆதாரமாக வட்டாட்சியர் அலுவலகத்தின் வருமானச் சான்றிதழ் நகல் அனைத்தையும் பெற்றோர்களும் பார்க்கும் வண்ணம் பள்ளியில் விண்ணப்பம் வழங்குமிடத்தில் ஒட்டப்பட வேண்டும் என்று அம்பத்தூரைச் சேர்ந்த தரும. அசோகன் கோருகின்றார். பெரும்பாலான கல்வித் துறை அதிகாரிகள், பிரபலமான பள்ளிகளில் உயரதிகாரிகளின் பிள்ளைகளுக்கு சீட் பெறுவதற்கே நேரம் போதவில்லை என்று அங்கலாய்க்கின்றனர். பொறியியல் படிப்புக்கு அரசின் ஒதுக்கீட்டை அண்ணா பல்கலைக்கழகம் நிரப்புவது போல், தனியார் பள்ளிகளில் அரசின் ஒதுக்கீட்டை பள்ளிக் கல்வித் துறையே நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடனடியாகத் தலையிட்டு தனியார் பள்ளிகளில் அரசின் ஒதுக்கீட்டை, உண்மையான ஏழை மாணவர்களுக்குச் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒவ்வொரு பள்ளிக்கும் சமூக ஆர்வலர், மக்கள் பிரதிநிதி, வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து ஏழை மாணவர்களுக்கு அரசின் ஒதுக்கீட்டை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.