Pages

Friday, June 10, 2016

10 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் கல்வித்துறை மவுனம்!

தமிழகத்தில், 10 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்காமல் கல்வித்துறை மவுனம் சாதித்து வருகிறது. அந்தப் பள்ளிகளைச் சேர்ந்த வாகனங்களின் உரிமங்களும், போக்குவரத்து துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால், இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல், நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர். அத்துடன், பல லட்சம் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.


தமிழகத்தில், தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த அங்கீ காரத்தை பெற, பல விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பெரும்பாலான பள்ளிகள், இந்த விதிகளை முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்கில் அங்கீகாரம் பெற்று விடுவது வழக்கம்.

ஆரம்பத்தில், பள்ளிகளுக்கான அங்கீகாரம், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்பட்டது. பின், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியை காட்டி, ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் புதுப்பிக்கப்படுகிறது. 10 ஆண்டுகள்தொடர்ந்து அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்ட முறையும் நிறுத்தப்பட்டுள்ளது. 

அனைத்து பள்ளிகளும் ஆண்டுதோறும் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதே, தற்போதுள்ள நிபந்தனை.நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில், 4,000 மெட்ரிக் பள்ளிகள், 5,000 நர்சரி, பிரைமரி பள்ளிகள் உட்பட மொத்தம், 10 ஆயிரம் பள்ளிகளின் அங்கீகாரம் மே, 31ம் தேதியுடன் முடிந்து விட்டது. இந்த பள்ளிகள் தங்களுக்கு அங்கீகார நீட்டிப்பு கேட்டு, கல்வித்துறை அலுவலகங்க ளில் மனு தாக்கல் செய்துள்ளன.

ஆனால், இதுவரை நீட்டிப்பு உத்தரவு வழங்கவோ, மனுவை நிராகரிக்கவோ, தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி, மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்கள் நடவடிக்கைஎடுக்கவில்லை. இருப்பினும், தற்போதைய நிலையில், 10 ஆயிரம் பள்ளிகள் அங்கீகாரம் முடிந்தும், மாணவர்களை சேர்த்து பாடம் நடத்துகின்றன. இந்த பள்ளிகளில் ஏதாவது ஒன்றில் அசம்பாவிதம் ஏற்பட்டாலும், அதற்கு சட்டரீதியாக அணுக முடியாத சூழல் உள்ளது.

மேலும் பள்ளி நிர்வாகங்கள், பள்ளி வாகனங்களுக்கு உரிமம் கேட்டு, போக்கு வரத்து அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளன. ஆனால், அங்கீகாரம் இல்லாத காரணத்தால், வாகன உரிமம் வழங்கும் பணிகளை போக்குவரத்து துறையும் நிறுத்தி வைத்துள் ளது.இதுகுறித்து, தனியார் நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச்செயலர் நந்தகுமார் கூறும்போது, ''தமிழக அரசின் பள்ளிக்கல்வி செயலகம், பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை நீட்டிக்கவில்லை. 

அதனால், போக்குவரத்து துறை வாகன உரிமத்தை நிறுத்தி வைத்துள்ளது. பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல், பள்ளி நிர்வாகிகள் தவிக்கின்றனர். எனவே, பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.