Pages

Friday, June 3, 2016

10-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர அரசு நிதியுதவி

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர் தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க அரசு வழங்கும் நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம்.


இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசுப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவியர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த 2 மாணவர்கள், 2 மாணவியர் என மொத்தம் 10 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் சேர்ந்து மேல்நிலைக் கல்வி படிக்க அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் உதவி பெற விரும்பும் மாணவ, மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.28,000 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.56,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

அதன்படி, தலா ஓராண்டுக்குக் கல்விக் கட்டணம் ரூ.8,000, பராமரிப்புக் கட்டணம் ரூ.3,650, விடுதிக் கட்டணம் ரூ.15,000 (விடுதியில் சேர்ந்து படிப்பவர்களுக்கு மட்டும்), சிறப்புப் பயிற்சிக் கட்டணம் ரூ.1,500 என மொத்தம் ரூ.28,150 அல்லது ரூ.28,000 வழங்கப்படும்.

மாவட்டத்தில் தகுதியுடைய மாணவ, மாணவியர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.