தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1ந் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்கள் நலன் கருதி அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும் என ஆசிரியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியுள்ளதாவது; கும்பகோணம் பள்ளி, தீவிபத்தில் 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் கருகி உயிரிழந்த சம்பவம் 2004ல் நிகழ்ந்தது. அது குறித்து விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தனியார் பள்ளிகளுக்கான பல விதிமுறைகளை தமிழக அரசு உருவாக்கியது.
பள்ளிகளில் தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும், கான்கீரிட் கட்டிடங்களில் மட்டுமே பள்ளிகள் இயங்க வேண்டும் என்பதுடன், பள்ளிகளுக்கு எவ்வளவு நிலம் இருக்க வேண்டும் என்பதையும் அரசு வரைமுறைப்படுத்தியது. 2005ம் ஆண்டு மெட்ரிகுலேஷன், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிமுறைகளுக்கு உட்படாத 1,500 பள்ளிகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தனர். நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பு இல்லாத பள்ளிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், 2009ம் ஆண்டு கல்வி உரிமைச்சட்டம் வந்தது. அச்சட்டத்தின்படி, ஏற்கெனவே அரசு உருவாக்கிய விதிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.
எனவே, அடிப்படை வசதிகள் இல்லாத 2,500 பள்ளிகளுக்கு 2011ல் நோட்டீஸ் அனுப்பியது தமிழக அரசு. போதுமான நிலப்பரப்பு அல்லாத பள்ளிகள் எக்காரணம் கொண்டும் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது, பள்ளிகளை தொடர்ந்து நடத்தக்கூடாது, அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற விதிமுறைக்கு உட்பட்ட பள்ளிகளில் சேர்க்க வேண்டும், முறையாக அரசு அனுமதி பெற்ற பிறகே பள்ளிகளை நடத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டது. தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் கோரின.
எனவே, போதிய இடவசதி இல்லாத பள்ளிகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அரசு விதிப்படி குறைந்தபட்ச நிலப்பரப்பை உறுதி செய்ய, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை தமிழக அரசு பல முறை நீடித்துவிட்டது. கடந்த கல்வி ஆண்டுடன் அப்பள்ளிகளுக்கான அங்கீகாரம் முடிவடைந்தது. தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கிடையாது என அரசு செய்தி வெளியிட்டது. இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, மே 31 வரை மட்டும் தாற்காலிக அடிப்படையில் ஒரே ஒரு முறை என்ற ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக்கூட கடைப்பிடிக்கவில்லை. எனவே, இந்த 746 பள்ளிகளையும் வரும் கல்வி ஆண்டுக்குள் மூட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் முதல் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் பெயர், முகவரியை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். இந்தப் பள்ளிகளில் புதிதாக மாணவர்களை சேர்க்க அனுமதிக்கக்கூடாது என கல்வித்துறைக்கும், தமிழக அரசுக்கும் ஆசிரியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும். மேலும் மே மாதத்துக்குப் பிறகு, இவற்றை இயங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. மேலும் இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அருகிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இந்த அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் பெயர், முகவரியை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். இந்தப் பள்ளிகளில் புதிதாக மாணவர்களை சேர்க்க அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
இப்படிக்கு
மாவட்டச்செயலாளர்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.