'ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் உரிய காலங்களில் நடத்தினால்தான் கல்வித்துறையில் குவியும் வழக்குகள் பெருமளவில் குறையும்' என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத் தலைவர் சாமி சத்தியமூர்த்தி வலியுறுத்தினார்.
நமது நிருபரிடம் அவர் நேற்று கூறியதாவது:கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள பெஞ்சமின், இத்துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக, ஆசிரியர் பணிமாற்றம் மற்றும் பணி நியமனம் வெளிப்படையாக நடக்க உத்தரவிட வேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு முன் 16,369 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களை முழு நேரமாக பயன்படுத்த வேண்டும்.
அனைவருக்கும் கல்வி (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தில் 380 வட்டார வளமையங்களில் மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரே நாளில் கலைக்கப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்தி அப்பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும்.
தற்போது 25 மாவட்டங்களில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,) பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிகரித்து வரும் பள்ளிகளுக்கு ஏற்ப, தாலுகாவிற்கு ஒரு மாவட்ட கல்வி அலுவலர் என்ற அடிப்படையில் டி.இ.ஓ.,க்கள் நியமிக்க நடவடிக்கை எடுத்தால் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை பணி சிறப்பாக இருக்கும்.
மாநிலம் முழுவதும் 3.50 லட்சம் ஆசிரியர்கள் உள்ள நிலையிலும், ஒருமுறை கூட குறைதீர்க்கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இனிமேல் உரிய இடைவெளியில் கூட்டங்கள் நடத்தப்பட்டால் கல்வித் துறையில் உள்ள வழக்குகள் குறையும். உச்சகட்ட குழப்பமாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) உள்ளது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் மற்றும் சலுகை மதிப்பெண் பிரச்னையில் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளை விரைவுபடுத்தியிருந்தாலே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாழ்வு கிடைத்திருக்கும். இது, அதிகாரிகள் பலருக்கும் தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.