Pages

Friday, May 6, 2016

இந்திய மருத்துவத்திற்கான பல்கலை; உயர்நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலியில் இந்திய மருத்துவத்திற்கான பல்கலை அமைக்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும், என, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லுாரி முதுகலை மாணவர் விஜய் விக்ரமன் தாக்கல் செய்த மனு: சித்த மருத்துவக் கல்லுாரி அமைக்க, விதிகள்படி 5 ஏக்கர் நிலம், மூலிகைத் தோட்டம் அமைக்க 10 ஏக்கர் நிலம் தேவை. திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லுாரி 4 ஏக்கரில் அமைந்துள்ளது. மூலிகைத் தோட்டம், விளையாட்டு மைதானம், கலையரங்கம் இல்லை. 


2012ல் இந்திய மருத்துவ மத்திய கவுன்சில், இக்கல்லுாரியில் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க முடியாது, என உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கல்லுாரி தொடர்ந்து செயல்பட அனுமதிக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


கல்லுாரி பொன்விழா கட்டடம் அமைக்க, அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2014 ல் தமிழக அரசு 8 கோடி ரூபாய் ஒதுக்கியது. அக்கட்டடம் அமைக்க இட வசதி இல்லை. குழந்தைகள் நல வார்டு, பசுமை வீடு, வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அகற்றி விட்டு, அங்கு பொன்விழா கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அம்முடிவு கைவிடப்பட்டது.


திருநெல்வேலி அருகே செட்டிகுளத்தில், இந்திய மருத்துவத்திற்கான பல்கலை அமைக்க, 2004 ல் தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக 200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. பின், நடவடிக்கை இல்லை. பல்கலை அமைக்கவும், அரசு சித்த மருத்துவக் கல்லுாரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, விஜய்விக்ரமன் மனு செய்திருந்தார்.


நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி கொண்ட அமர்வு உத்தரவு:திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லுாரியால் ஈர்க்கப்படும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மாணவர்கள் ஆர்வத்துடன், அக்கல்லுாரியில் படிக்கின்றனர். 

இக்கல்லுாரி, படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளை பாதுகாத்து, ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு அரசு செய்யத் தவறினால், இயல்பாகவே பழங்கால பாரம்பரிய மருத்துவ முறைகள் மறைந்து விடும். 

செட்டிகுளத்தில், இந்திய மருத்துவத்திற்கான பல்கலை அமைக்க 2012ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதை ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மனுதாரர் வழக்கறிஞர் பிரபு ராஜதுரை ஆஜரானார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.