Pages

Friday, May 27, 2016

வண்ணமயமான வகுப்பறை சூழல்

'புதிய கல்வியாண்டை புத்துணர்வோடு வரவேற்க காத்திருக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் எதிர்பார்ப்பை விட முற்றிலும் வண்ணமயான வகுப்பறை சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை,' என்கிறார் ஆலாத்துார் நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியை நிர்மலா மேரி.அவர் கூறியதாவது:


ஒவ்வொரு மாணவர்களின் மனநிலையும் ஒரு விதமானது. ஆசிரியர்கள் இதை முதலில் புரிந்துகொண்டு, அவர்கள் எண்ணங்களுக்கு ஏற்ப கற்பித்தல் முறையை மாற்றி அமைத்துக்கொள்வதில் தான் அவர்களின் திறமையும், அர்ப்பணிப்பு தன்மையும் வெளிப்படும்.

பள்ளிகளில் ஆசிரியர்களை தான் தங்களது 'ரோல் மாடலாக' மாணவர்கள் நினைக்கின்றனர். எனவே ஆசிரியர்கள் முன்மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருவதில் நேரம் தவறாமை அவசியம். ஆசிரியர்களுக்குமுன், தலைமையாசிரியர் இருப்பது அதைவிட சிறந்தது.

வகுப்பறை சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 'ஆசிரியர்- மாணவர்' உறவு என்பது 'குரு- சிஷ்யன்' என்பதையும் தாண்டி அதில் பக்தியும், நம்பிக்கையும் நிறைந்திருப்பது அவசியம். அதேபோல் ஆசிரியர்- தலைமையாசிரியர் உறவும் தோழமையோடு இருக்க வேண்டும்.

தவறு செய்வது மாணவப் பருவம். வகுப்பறையில் ஒரு மாணவர் தவறு செய்தால், அம்மாணவரை அனைவரின் முன் கண்டிக்காமல், தனியாக அழைத்து அன்புடன் கண்டிக்கும் பழக்கம் ஆசிரியர்களுக்கு நல்லது. அந்த மாணவரின் சிறப்பு, குணநலன்களை பாராட்டி, கடைசியாக அவரது தவறை சுட்டிக்காட்டி, திருத்துவது தான் நல்லாசிரியர்களுக்கே உரித்த கலை. இதனால், மாணவர்கள் தன் நிலை உணர்ந்து திருந்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். பாராட்ட வேண்டிய நேரத்தில், தவறாமல் பாராட்ட வேண்டும். அது மாணவர்கள் மேலும் சாதிக்க வேண்டும் என்பதற்கான 'உற்சாக டானிக்' ஆகும். எக்காரணத்தை கொண்டும் மத, இன ரீதியான போக்கு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வந்துவிடாத வகையில் வகுப்பறை சூழலை உருவாக்க வேண்டியது தலைமையாசிரியர்களின் பிரதான கடமை.

மாணவர் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அவனை படிக்க துாண்ட வேண்டும். நாளிதழ் வாசிப்பு, நுாலகத்தை பயன்படுத்த செய்வது, தன்னார்வ செயல்பாடுகளில் ஈடுபட துாண்டிவிடுவது ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்.பள்ளிகளின் தலைமையாசிரியர்- ஆசிரியர்கள் இணக்கமாக இருந்து, கூட்டாக ஆலோசித்து, மாணவர்கள் மேம்பாட்டிற்கான செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, உரிய நிர்வாகங்களில் உரிமையோடு கேட்டு பெறும் திறன், தலைமைாசிரியர்களுக்கு வேண்டும்.எல்லாவற்றையும் விட தற்போதைய சூழலில் மாணவர்களின் சிந்தனைத்திறன் அதிகம். அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வது அவசியம். மாணவர்களை படிக்க துாண்டும் புதிய அணுகுமுறைகளை கையாளவேண்டும். எக்காரணம் கொண்டும், மாணவர்களை ஒப்பிட்டு பேசுவதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும்.

மாணவர்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் பல்வேறு கலை திறன்களை வகுப்பறையில் காட்சிப்படுத்தலாம். ஓவியத் திறன் உள்ள மாணவர்களின் ஓவியங்களை வகுப்பறை சுவர்களில் ஒட்டி வைக்கலாம்.கற்பித்தலின்போது ஆசிரியர்கள் தங்கள் திறமையால் வகுப்பு முடியும் வரை அவர்களை 'கட்டிப்போட வேண்டும்'. மாணவர்கள் கேள்வி கேட்கும் சூழலை உருவாக்கும் வகையிலான கற்பித்தல் முறையை, ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.