Pages

Tuesday, May 10, 2016

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்களை சமர்ப்பிக்க உரிய கால அவகாசம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்கள் ஆண்டுதோறும் கல்வி தகவல் மேலாண்மை முறையில்(இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.


இதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் குறியீட்டு எண் மூலம் அவரின் முழுமையான விவரங்களை அறிய முடியும். இந்த திட்டத்தை கல்வித்துறை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2015-16-ஆம் கல்வியாண்டிற்கான, மாணவ, மாணவிகளின் தகவல் தொகுப்பு விவரங்களை பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் அரசு உதவிபெறும், சுயநிதி, மத்திய அரசுப்பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள், செவ்வாய்கிழமைக்குள் (மே 10) இந்த விவரங்களை மின்னஞ்சல் மூலம் இடைநிலைக் கல்வி இணை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், விவரங்களை பதிவு செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
 இது குறித்து தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:- 
 இந்தத் தகவல் தொகுப்பில், மாணவர்களின் புகைப்படங்கள் அண்மைக்கால படங்களாக மாற்றப்பட வேண்டும். அத்துடன் பள்ளியளவில் மாற்றம் செய்த மாணவர்களின் விவரங்களில் ஏற்படும் குழப்பம் தவிர்க்கப்பட வேண்டும். இவற்றை எங்களுக்கு வழங்கப்பட்ட 4 நாள்களில் முடிக்க முடியாது. எனவே, இப்பணிகளை நிறைவு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். அல்லது பள்ளிகள் திறந்தபின் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இப்பணிகளை மேற்கொண்டால் துல்லியமான விவரங்கள் அளிக்க முடியும் என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.