உலக அளவில், 69 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது, என, உச்ச நீதிமன்ற, ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் பேசினார். மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின், 30ம் ஆண்டு விழா மலர் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா, சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நேற்று நடந்தது. விழாவில், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மோகன், சங்கத்தின், 30ம் ஆண்டு விழா மலரை வெளியிட்டு, சேவா ரத்னா விருதுகளை வழங்கி பேசியதாவது:
திருக்குறள், ஒரு வாழ்வு நெறி நுால். தமிழில் மிகச் சிறந்த நுாலும் இது. இந்நுால், உலக அளவில், 69 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தனி மனிதனின் நல்வாழ்வு, மாசு இல்லாமல் இருக்க வேண்டும். இதைத் தான் பைபிளும் கூறுகிறது. திருக்குறள் கருத்தை பல நுால்களும், குறிப்பாக ஏராளமான ஆங்கில நுால்கள் பிரதிபலித்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
சேவா ரத்னா விருதை, சென்னை காமராஜர் துறைமுக நிறுவனம்; வ.உ.சி., துறைமுகப் பொறுப்புக் கழகம்; துாத்துக்குடி, பாரத ஸ்டேட் வங்கி; நேரு யுவ கேந்திரா, சாய்ராம் கல்விக் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் பெற்றன. சங்க மலரின் முதல் பிரதியை, பாரதிய வித்யா பவன் தலைவர் சபா ரத்தினம் பெற்றார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திருக்குறள் நெறிச் செம்மல், திருக்குறள் நெறித் தொண்டர் உள்ளிட்ட விருதுகளை வழங்கிய, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசியதாவது:
நல்ல விஷயங்களை கேட்க விரும்பாதவர்களிடம் சொல்வது, மறு காது வழியாக சென்றுவிடும். வள்ளுவம் என்பது வாழ்க்கை முறை. அறம், பொருளை காட்டும்; பொருள், இன்பத்தை காட்டும். மனதில் மாசு என்பதே இருக்கக் கூடாது. அழிவின் ஆரம்பம் கோபம். மனிதன் கோபப்பட்டால் குடும்பம் அழிந்து போகும்; மன்னர் கோபப்பட்டால் நாடு அழிந்து போகும். செல்வந்தரை பாராட்டுவது பெருமையல்ல; சிறந்த செயலைச் செய்பவரை பாராட்டுவது தான் பெருமை. இவ்வாறு அவர் பேசினார்.
விருது பெற்ற, முன்னாள் நீதிபதி மோகன், கீர்த்திவாசன், சந்திரமோகன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர். சங்கம் நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், பரிசுகளை வழங்கி பேசினார்.
முன்னதாக, சங்கத்தின் இணைச் செயலர் ஹேமா சந்தானராமன் வரவேற்றார். சங்க செயலர் சேயோன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
பாரத் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொன்னவைக்கோ, நேரு யுவகேந்திரா மண்டல இயக்குனர் சதீஷ், பாரதிய வித்யா பவன் இயக்குனர் ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சுருதிலயா இயக்குனர் பார்வதி பாலசுப்பிரமணியனின் தலைமையில், திருக்குறள் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.