சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி பணிகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பணி நிரந்தரம் பெற்ற ஆசிரியர்களே, பல ஆண்டுகளாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.'இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களும், கட்டாயம் பணிக்கு வர வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். தேர்தல் பணியில், ஒவ்வொரு சிறப்பு ஆசிரியரும் கண்டிப்பாக ஈடுபட வேண்டும்; அதற்காக, அவர்களின் பெயர் பட்டியலை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
கடந்த, 2012ல் பணி நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், தொகுப்பூதிய அடிப்படையில், பள்ளிகளில், வாரம் மூன்று வகுப்பு மட்டும் எடுத்து வருகின்றனர். தேர்வு விடுமுறை, கோடை விடுமுறை நாட்களில், இவர்களுக்கு சம்பளம் இல்லை; வேறு எந்த சலுகையும் அளிப்பதில்லை. இதுவரை, எந்த தேர்தலிலும் சிறப்பு ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படாத நிலையில், தற்போது மட்டும் கட்டாயப்படுத்தக் கூடாது என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நல சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:பகுதி நேர ஆசிரியர்களுக்கு, அரசு எந்த சலுகையும் அளிக்கவில்லை. அவர்கள் தினக்கூலியை விட, குறைவான சம்பளம் வாங்குகின்றனர். பள்ளி விடுமுறை என்றால் ஊதியம் கிடையாது. அரசு ஊழியர்களுக்குரிய எந்த சலுகையும் வழங்காமல், திடீரென தேர்தல் பணிக்கு மட்டும் வர கட்டாயப்படுத்துவது, அதிர்ச்சியாக உள்ளது, என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.