Pages

Saturday, April 16, 2016

தபால் ஓட்டுக்களை விரைவாக அனுப்புங்க: எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்

தேர்தல் பணி செல்லும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.தேர்தலின்போது ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பது, வாக்காளர்களுக்கு விரலில் மை வைப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். அரசு ஊழியர்களின் விவரங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே சேகரிக்கப்பட்டு தேர்தல் துறையால் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.


ஆசிரியர்களே பாதிப்பு: தேர்தல் பணி செல்லும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளை அவரவர் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும். தேர்தல் பணிக்கு செல்வதற்கு முன் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டளித்து, அதனுடன் உள்ள உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு அந்தந்த ஒன்றிய அலுவலத்தில் உள்ள பெட்டியில் போட வேண்டும். இந்நிலையில் கடந்த இரு தேர்தல்களில் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுகள் காலதாமதமாக கிடைத்ததால் பெரும்பாலான ஆசிரியர்கள் ஓட்டளிக்க முடியாத நிலை உருவானது. அதிலும் பெண் ஆசிரியர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

தேர்தல் ஆணையம்: மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கல்வித் துறை அலுவலர்களிடம் முறையிட்டு எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் கடந்த தேர்தல்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது. இந்த தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை எய்திடும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. எனவே தேர்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தங்கள் ஓட்டை பதிவை உறுதி செய்திட தேர்தல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயிற்சி போதே வழங்கலாம்:தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு கட்டமாக பயிற்சி வகுப்புகளும், மூன்றாம் கட்டமாக எந்த ஓட்டுச் சாவடியில் பணி என்பதற்கான பணியாணையும் வழங்கப்படும்.இந்த தேர்தலில் பயிற்சி வகுப்புகள் நடக்கும் போதே தபால் ஓட்டுகளை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

90 சதவீதம் ஓட்டு:கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த தேர்தலில் ஆசியர்களுக்கான தபால் ஓட்டுகள் 90 சதவீதம் வீட்டுக்கு வரவே இல்லை. 10 சதவீதம் தபால் ஓட்டுகள் ஆசிரியர்கள் சங்கத்தின் மூலம் கேட்கப்பட்டு காலதாமதமாக வந்ததால் ஓட்டுப் போடாத நிலை உருவானது. இந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் ஆசிரியர்கள் வீட்டுக்கு காலதாமதமின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.