Pages

Tuesday, April 26, 2016

பணியாளர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பூட்டு?

பணியாளர் பற்றாக்குறையை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டதால், எட்டு பதிவு மாவட்டங்களில், சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பூட்டு போட வேண்டிய ஏற்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், சொத்து பரிமாற்ற ஆவணங்களை பதிவு செய்ய, 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றை நிர்வகிக்க, 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.நடைமுறை இந்த அலுவலகங்களில், 30 - 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.
குறிப்பாக, சார் பதிவாளர், உதவியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்கள் பல காலியாக உள்ளன. பொதுவாக தேர்தல் சமயங்களில் , மற்ற துறைகளை போல் பதிவுத்துறை பணியாளர்களும் தேர்தல் பணிக்கு அனுப்பப்படுவர்; இது தொடர்பாக, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்வர். இதற்காக ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் உள்ள மொத்த பணியாளர் பட்டியல் பெறப்படும். அதில், ஒவ்வொருநிலையிலும் ஒருவர் வழக்கமான பணிகளை கவனிப்பதற்காக விடப்படுவர். மற்ற அனைவருக்கும், தேர்தல் பணி ஒதுக்கப்படும்.தேர்தலில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாள், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நாட்களில் மட்டும் தான் இவர்களுக்கு வேலை என்றாலும் அதற்கான முன் தயாரிப்பு, பயிற்சி என்று, 10 நாட்களாவது செல்ல வேண்டியிருக்கும்.
இந்த வகையில் பதிவுத்துறை, ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளவர்கள் பட்டியல் பெறப்பட்டு, அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு வருகிறது.இதில், மாற்று பணியாளர் இல்லாத அலுவலகங்களில்அனைவரையுமே தேர்தல் பணிக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டு உள்ளதாக புகார் எழுந்து உள்ளது.

8 மாவட்டங்களில்...

இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பற்றாக்குறை எண்ணிக்கை யில் உள்ள பணியாளர்களை கொண்டே பத்திரப்பதிவுகள் நடந்து வருகின்றன. தஞ்சை, பட்டுகோட்டை, அரியலுார், பெரம்பலுார், திருப்பூர், செய்யாறு, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து பணியாளர்களுக்கும் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால், பயிற்சிக்கு செல்லும் நாட்களிலேயே, சார் பதிவாளர் அலுவலகத்தை பூட்டிவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.