புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்வி, சமுதாய மாற்றத்திற்கான செயல்திட்ட போட்டியில், திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட நீடாமங்கலம் காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த சமூக மாற்றத்துக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்க நிறுவனமான பிரமேரிக்கா சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் போட்டிகளில், பள்ளி மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகள், செயல்திட்டங்களைப் பாராட்டி, பதக்கம்- பரிசுகள் வழங்கப்படுகின்றன. புது தில்லியில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான போட்டியில் 4970 பள்ளிகள் கலந்துகொண்டன.
இறுதிச் சுற்றுக்கு கொல்கத்தாவில் உள்ள லா மார்டினியர் இன்டர்நேஷனல் பள்ளி, ராஜஸ்தானில் உள்ள சத்ய பாரதி சி.பி.எஸ்.இ. பள்ளி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியன தேர்வு பெற்றன. இதில் காளாச்சேரி பள்ளி மாணவர்கள் சி.விஷாமுகில், ஆ.லீலா, மு.திவ்யா, ச. சேதுபதி ஆகியோர் முதலிடம் பெற்று, ரூ.50 ஆயிரம், தங்கப்பதக்கம் வென்றனர். இதுகுறித்து ஆசிரியர் செந்தில் கூறுகையில், தற்கொலை எண்ணம் தவறானது என்ற விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்திய செயல்திட்டத்துக்கு மாநில அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தேசிய அளவிலான போட்டியிலும் விருது கிடைத்துள்ளது.
வழக்கமாக, இதுபோன்ற போட்டிகளில் தனியார் பள்ளி மாணவர்கள்தான் அதிக அளவில் கலந்து கொள்கின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களும் வெற்றி பெற்றது மற்ற மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
No comments:
Post a Comment