Pages

Monday, March 14, 2016

சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ஆசிரியர்கள், விஏஓ தலைமையில் குழு

கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளுக்கு ஆசிரியர்கள், விஏஓக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் எனதமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிப்பது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்குப் பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:


தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த 2 தேர்தல்களில் குறைவான வாக்குகள் பதிவான இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழுவில், வாக்குச்சாவடி அலுவலர், ஆசிரியர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த விஏஓ ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். இவர்கள் வீடு, வீடாக சென்று வாக்களிப்பதன் அவசியத்தை மக்களிடம் விளக்கி வரும் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பிரசாரம் செய்வார்கள். தற்போது, கல்லூரிகளில் மட்டுமே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அடுத்தகட்டமாக, அனைத்து ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் முகாம் நடத்தப்படும். மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதுதவிர திருவிழா நடைபெறும் பகுதிகள், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், விஏஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் தொடர்பான வாசகத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் மால்களிலும் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்படும். தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் தெரு, தெருவாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் கர்ப்பிணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இதுவரை ஆன்லைன் மூலம் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்தக்கோரி 466 பேரும், வாகன பிரசாரம் நடத்த கோரி 154 பேரும், ஊர்வலம் நடத்தக் கோரி 74 பேரும், தேர்தல் அலுவலகம் திறக்க கோரி 14 பேரும் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் எவ்வளவு பேர் தேவைப்படும் என்பது குறித்து முடிவு செய்ய டெல்லியில் நாளை ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் நான் கலந்து கொள்கிறேன். கூட்டத்துக்கு பின் இறுதி முடிவு எடுக்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில்  240 கம்பெனிகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஒவ்வொரு கம்பெனியிலும் 70 முதல் 100 வீரர்கள் வரை இருப்பார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 140 கம்பெனியை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

வீடியோ கான்பரன்சிங்

15ம் தேதி சென்னை வந்து அனைத்து  மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்தல் குறித்து ஆலோசனை  நடத்த உள்ளேன். தொடர்ந்து 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள்  வாரியாக தேர்தலுக்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  ஆய்வு செய்ய உள்ளேன் என்று ராஜேஷ் லக்கானி கூறினார்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.