அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத காலிப் பணியிடங்களை தனியார் முகமை (அவுட்சோர்சிங்) மூலம் நிரப்ப வகை செய்யும் இரண்டு அரசாணைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு உதவி பெறும் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, கடந்த 2007 மே 30, 2010 ஜூலை 23 ஆகிய தேதிகளில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.
இதில், 2007-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், காலியாக உள்ள துப்புரவாளர், பெருக்குபவர் பணியிடங்களையும் தனியார் முகமை மூலம் நிரப்பலாம். காவலர் காலிப் பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்களை தனியார் முகமை மூலம் நிரப்பலாம். இந்தப் பணியிடங்களைப் பொருத்தவரை, உதவி பெறும் பள்ளிகளே இதற்கான செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்து.
அதேபோன்று, 2010-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், துப்புரவாளர், காவலர், தோட்டக்காரர் உள்ளிட்ட 467 பணியிடங்களை வெளியாள்களைக் கொண்டு நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு அரசாணைகளையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
2007-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை வெளியாள்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் எனவும், அதற்கான செலவை அந்தந்த அரசு உதவி பெறும் பள்ளிகளே ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், காலிப் பணியிடங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மறைமுகமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும், இந்த அரசாணைக்குப் பிறகு, தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத காலிப் பணியிடங்களுக்கு நிதியை ஒதுக்க மாவட்ட கல்வி அதிகாரிகள் (டி.இ.ஓ) மறுத்துள்ளனர்.
எனவே, மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளபடி மாவட்ட கல்வி அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், இதுதொடர்பாக 2007, 2010 ஆகிய ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment