Pages

Wednesday, March 23, 2016

சர்வதேச பல்கலை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு தரவரிசை

சர்வதேச பல்கலைகளின் பாடவாரியான திறன் பட்டியலில், சென்னை, அண்ணா பல்கலை, மூன்று பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த, க்யூ.எஸ்., எனப்படும், 'க்வாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்' நிறுவனம் சார்பில், இன்ஜி., மற்றும் அறிவியல் பல்கலைகளின் தரவரிசை பட்டியல், ஆண்டுதோறும் வெளியிடப்படும். அதன்படி, கடந்த கல்வி ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியானது.

இதில், அண்ணா பல்கலை, 293வது இடம் பிடித்தது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகள் இடம் பெற்ற, 'பிரிக்ஸ்' நாடுகளின் பல்கலை பட்டியலில், அண்ணா பல்கலை, 151வது இடமும்; சென்னை பல்கலை, 78வது இடத்தையும் பிடித்தன.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., சர்வதேச தரவரிசை பட்டியலில், 254வது இடம்; இன்ஜி., பிரிவில்,72வது இடம்; 'ப்ரிக்ஸ்' நாடுகள் பட்டியலில், 20வது இடம்; ஆசிய நாடுகளின் பட்டியலில், 56வது இடத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில், பாடவாரியாக, பல்கலைகளின் செயல்பாட்டு திறன் பட்டியலை, க்யூ.எஸ்., நிறுவனம், நேற்று வெளியிட்டது. அதில், சென்னை ஐ.ஐ.டி., ஒன்பது பாடப்பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது.இதன்படி, இயற்பியல் - 201 இடம்; கணிதம் - 151; வேதியியல் - 151; மெட்டீரியல் சயின்ஸ் - 101; கணினி அறிவியல் மற்றும் ஐ.டி., - 101; மெக்கானிக்கல் - 51; சிவில் - 51;ரசாயனம் - 51 மற்றும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 51; ஆகிய பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது. இதேபோல், சென்னை அண்ணா பல்கலை, மூன்று பிரிவுகளில் தர வரிசை பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் அறிவியலில், 251வது இடம்; மெக்கானிக்கலில், 151வது இடம்; கணினி அறிவியல் மற்றும் ஐ.டி.,யில், 401வது இடத்தை பெற்றுள்ளது. இவை தவிர, ஐ.ஐ.டி., மும்பை மற்றும் ரூர்கி ஐ.ஐ.டி., டில்லி பல்கலை மற்றும் ஜெ.என்.யு., பல்கலையும் பாடவாரியான பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இங்கிலாந்து நாட்டில் உள்ள, 'கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட்', அமெரிக்காவின் எம்.ஐ.டி., சிங்கப்பூர் தேசிய பல்கலை போன்றவை சர்வதேச அளவில், முதல், 20 இடங்களுக்குள் தரவரிசை பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.