Pages

Tuesday, March 22, 2016

ஆசிரியர்கள் நாள்தோறும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்


ஆசிரியர் என்பவர் நாள்தோறும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் திறன் படைத்தவர்களாகவும், தமக்குத் தாமே உந்துதலைக் கொடுத்து முன்னேற்றத்தை அறிவார்ந்த தளத்திலும், ஒழுக்க நிலையிலும் முன்மாதிரியாக விளங்குதல் அவசியம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி கூறினார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட 11 தொடக்க மற்றும் 5 உயர் தொடக்க நிலை மையங்களில் 680 ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியை நரையன்குளம் ஒத்தப்பட்டி குறுவளமையத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் அனைத்தும், ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்குரிய முயற்சிகளுக்கு உள்ளீடுகளைத் தரும் அம்சங்களாக அமைந்துள்ளது.

மாணவர்களின் அறிவு, அனுபவம், ஆற்றலை மேம்படுத்த கல்வித் துறையானது பல திட்டங்களை வகுத்தும் செயல்படு்த்தியும் வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கமானது, தொடக்கக் கல்வியின் கற்றல் நோக்கங்களை வகுத்து, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை அதிகரிக்கப் பல்வேறு பயிற்சிகளையும், மாணவர்களின் அடைவுத் திறனை அளந்தறிய பல்வேறு மதிப்பீட்டு உத்திகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. தரமான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில் தமிழகக் கல்வித்துறை குறிப்பாக, அனைவருக்கும் கல்வி இயக்கம் எடுத்து வரும் முன்னெடுப்புகள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாய் விளங்கி வருகிறது.

மாணவர்களின் முன்னேற்றம் குறித்த ஆதாரங்களை மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிவித்து மாணவர்களின் வளர்ச்சியில் அவர்களையும் ஈடுபடச் செய்ய இந்த மதிப்பீட்டு பயன்படுகிறது. மாணவர்களின் கற்றல் அடைவுகளையும் அவர்களின் பல்வேறு படைப்பாற்றல்கள் மற்றும் பாடம் சாரா இதர செயல்பாடுகளையும், அவர்களுடைய ஆளுமை வளர்ச்சியையும் ஆசிரியர் உற்றுநோக்கிக் காலாண்டிற்கு ஒரு முறை பதிவு செய்து அவர்களுடைய கற்றல் நிலையைப் பெற்றோருக்குத் தெரிவிப்பதன் மூலம் மாணவர்களின் செயல் திறன் வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார் அவர்.

பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியப் பயிற்றுநர்கள் எம்.வேணி, வி.மருதக்காளை, த.கணேஷ்வரி, எஸ்.மாரியப்பன், ஜி.தர்மர், எம்.கனகலட்சுமி, ஏ.ஜூடு அமலன், எம்.மீனலோஷினி, பி.கற்பகம், எஸ்.முத்துலட்சுமி, எஸ்.சுந்தரேஸ்வரி மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் செயல்பட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.