Pages

Monday, March 21, 2016

தேர்வு ஒருபக்கம்; தேர்தல் மறுபக்கம்

தேர்வு பணி, தேர்தல் வேலை என, இரட்டை பணிச்சுமையால், ஆசிரியர்கள் புலம்புகின்றனர். இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மூன்றாம் பருவ பாடங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது; மறுபக்கம், சட்டசபை தேர்தல் பணிகளும் விறுவிறுப்பு அடைந்துள்ளன. தேர்வு பணி மற்றும் தேர்தல் பணி என, இரண்டிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஏப்., 22ல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ தேர்வு துவங்குகிறது.


தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக, கடந்தாண்டு டிச., மாதம் நடக்க வேண்டிய இரண்டாம் பருவ தேர்வு, ஜன., மாதம் நடைபெற்றது. தேர்வுக்குபின், ஒன்றரை மாதங்களாக, மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்படுகின்றன. நான்கு மாதங்களில் நடத்த வேண்டிய பாடங்களை, மூன்று மாதங்களில் முடிக்க வேண்டிய கட்டாயம், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இப்போது சட்டசபை தேர்தல் பணி, பொதுத்தேர்வு பணி என வழங்கப்பட்டுள்ளதால், அப்பணிகளுக்கு சென்று விடுகின்றனர். வகுப்பறையில் சொற்ப ஆசிரியர்களே உள்ளதால், பாடத்தை முழுமையாக முடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. சில பாடங்கள், இன்னும் அரை குறையாக பாதியில் நிற்கிறது. 

சில ஆசிரியர்கள், கிடைக்கும் நேரத்தில் சிலபஸ்சை முடிக்க வேண்டும் என, அவசரகதியில் பாடம் நடத்துகின்றனர். ஆசிரியர் ஒருவர் கூறுகையில், அடுத்த மாத இறுதிக்குள் மூன்றாம் பருவ பாடங்களை முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால், அவசரகதியில் நடத்தி முடிப்பதை தவிர, வேறு வழியில்லை என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.