'பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணிதத் தேர்வுகளில், மதிப்பெண் வழங்குவதில் சலுகை அளிக்க வேண்டும்' என, தேர்வுத் துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில், வேதியியல் தேர்வு, மாணவர்களுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வினாத்தாள், மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருந்ததாக, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இதனால், மாணவர்கள், அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுத முடியாமல தடுமாறினர். எனவே, இந்த ஆண்டு வேதியியல் பாடத்தில், 'சென்டம்' பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல், கணிதத் தேர்விலும் கடினமான வினாக்கள் இடம் பெற்றன. அதனால், இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல், 'கட் ஆப்' மதிப்பெண் குறையும் வாய்ப்பு உள்ளதாக, மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், 'வேதியியல் மற்றும் கணிதத் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் போது, சலுகைகள் வழங்கி, மதிப்பெண் தர வேண்டும்' என, ஆசிரியர் சங்கங்கள், தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியை சந்தித்து மனு அளித்துள்ளன.
இது குறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறுகையில், ''வேதியியல் தேர்வு, மாணவர்களை கடுமையாக அதிர வைத்துள்ளது. எனவே, இந்த தேர்வு மற்றும் கணிதத் தேர்வின் விடைத்தாள் திருத்தத்தின் போது, சிக்கலான கேள்விகளுக்கு, 'போனஸ்' மதிப்பெண் வழங்கி, தேர்வுத்துறை சலுகை காட்ட வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment