Pages

Tuesday, March 15, 2016

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்துக்கு விலக்கு

தமிழகத்தில், இன்று துவங்கும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் அல்லாத மொழியை, தாய்மொழியாகக் கொண்டவர்கள், பிளஸ் 2 தேர்வில், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்து, சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்விலும், தமிழ் மொழி பாடத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குரு துரோணாச்சாரியா பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகள் சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களில், 'எங்கள் பள்ளிகளில், வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் படிக்கின்றனர். எனவே, தமிழ் மொழி பாடத்துக்கு பதில், மாணவர்களின் தாய் மொழி பாடத்தை எழுத, அனுமதிக்க வேண்டும்' என, கூறப்பட்டது.

மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: விதி விலக்கு கோரி, குறித்த நேரத்தில், மாணவர்கள் விண்ணப்பித்து விட்டனர். பள்ளிகள் தரப்பில் தான், கால தாமதம் ஏற்பட்டுள்ளது; அதுவும், 10 நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பினாலும், சில பிரச்னைகள் ஏற்பட்டன. பள்ளிகள் தரப்பில், விண்ணப்பங்களை அனுப்ப கால தாமதம் ஏற்பட்டதற்காக, மாணவர்கள் பாதிக்கக் கூடாது. ஏற்கனவே, தமிழ் மொழி பாடத் தேர்வுக்கு விலக்கு அளித்து, உத்தரவு பிறப்பித்துள்ளோம். எனவே, மனுதாரர்களுக்கு, தமிழ் மொழி பாடத் தேர்வு எழுத, விலக்கு அளிக்கப்படுகிறது. மனுதாரர்களை போல் உள்ள மற்ற மாணவர்களும், தேவையின்றி கஷ்டப்படக் கூடாது. அரசு தேர்வு இயக்குனரகத்தை, இன்று மாலை, 5:00 மணி வரை அணுகி, நீதிமன்றத்தை அணுக இயலாதவர்களுக்கும், இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.