Pages

Thursday, February 25, 2016

தமிழக சட்டசபை தேர்தல் எப்போது?

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அட்டவணை மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நடைபெற்று வரும் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், பொது பட்ஜெட் பிப்ரவரி 29ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


நடப்பு தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. மே மாத இறுதிக்குள் 5 மாநில சட்டசபை தேர்தல்களும் நடத்தி முடிக்கப்படும் என சமீபத்தில் புதுச்சேரியில் நடக்கும் தேர்தல் ஏற்பாட்டு பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைய்தி கூறி இருந்தார். இதனால் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பார்லி, பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருவதால், 5 மாநில தேர்தலை குறிவைத்து பட்ஜெட்டில் புதிய அறிவிப்புக்களை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பு உள்ளது.


இதனை தவிர்ப்பதற்காக மத்திய பட்ஜெட் பிப்ரவரி 29ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏப்ரல் மத்தியில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆய்வு பணிகள், தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பீகாரில் இருந்து வரவழைப்பு என தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் பெரும்பாலும் முடித்து விட்டது.


இந்நிலையில் எந்நேரமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் தமிழக தேர்தல் கட்சிகளும் இப்போதே பிரசாரத்தை துவக்கி உள்ளன. விருப்பு மனு பெறுதல், நேர்காணல், பிரசாரங்கள் என தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் முதல்வர் கனவிலும், தங்கள் கட்சி தான் அடுத்து ஆட்சிக்கு வர உள்ளதாக நம்பிக்கையிலும் உள்ளதால் தேர்தல் வாக்குறுதிகளையும் வாரி வழங்கி வருகின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.