தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில், உதவி பேராசிரியர் தேர்வில், முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரி, முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோர், முதல்வர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில், பிப்., 3ல், உதவி பேராசிரியர் தேர்வு நடந்தது. அன்று சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் நேர்முக தேர்வுக்கு மட்டுமே, பல்கலை சார்பில், கூரியர் மூலமாகவும், 'இ - மெயில்' மூலமாகவும், அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, பத்திரிகையில் செய்தி வெளியானதும், அவசரகதியில், எழுத்துத்தேர்வு தொடர்பான வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. அதில், 50 வினாக்கள் இடம் பெற்றிருந்தன.விடைத்தாள் கொடுக்காமல், வினாத்தாளிலே சரியான பதிலை, 'டிக்' செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டோம். இந்த தேர்வு, பள்ளிக்கான தரத்தில் கூட நடத்தப்படவில்லை.
இந்த வகையான எழுத்துத்தேர்வில், பணம் கொடுத்த மாணவர்களின் வினாத்தாள்களில், பல்கலைக்கழக நிர்வாகமே, 'டிக்' செய்து கொள்ள வாய்ப்பு அதிகம்.
எழுத்துத்தேர்வுக்கும், நேர்முகத்தேர்வுக்கும், தலா, 50 மதிப்பெண் தரப்பட்டிருந்தது; இது பல்கலை சட்டத்திற்கு விரோதமானது. நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களிடம், வகுப்பை நடத்தச் சொல்லியோ, ஆங்கில மொழி திறன் கண்டறியவோ, பணி சார்ந்த அனுபவம் குறித்தோ கேட்காமல், 'நீங்கள் படித்த பாடப்பிரிவுகளின் பெயரை சொல்லுங்கள்' என, சம்பிரதாயத்திற்கு, ஒரு கேள்வியை கேட்டு அனுப்பி விட்டனர்.
இதில் நடந்துள்ள முறைகேடுகளை வெளிக்கொண்டு வர, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment