மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தொடர்ந்து, வருகிற 2016-17 கல்வியாண்டில் 70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல, மாணவர் சேர்க்கை இடங்களைக் குறைக்க 20-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள் குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக எம்.சி.ஏ., பி.டெக். தகவல் தொழில்நுட்பம், பி.இ, கணினி அறிவியல், இசிஇ போன்ற கணினிப் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
மெக்கானிக்கல் பிரிவு மீது ஆர்வம்: அதேவேளையில், இயந்திரவியல், கட்டுமானப் பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
2013-இல் இயந்திரவியல் பிரிவை 28,010 பேரும், மின்னணுவியல் தொடர்பியல் (இசிஇ) பிரிவை 22,449 பேரும், கட்டுமானப் பொறியியல் பிரிவை 15,655 பேரும், கணினி அறிவியல் பிரிவை 13,423 பேரும் தேர்வு செய்தனர். 2014-இல் இயந்திரவியல் பிரிவை 26,770 பேரும், மின்னணுவியல் தொடர்பியல் பிரிவை 19,012 பேரும், கட்டுமானப் பொறியியல் பிரிவை 17,010 பேரும், கணினி அறிவியல் பிரிவை 13,987 பேரும் தேர்வு செய்தனர்.
2015-இல் இயந்திரவியல் பிரிவை 26,942 பேரும், மின்னணுவியல் தொடர்பியல் பிரிவை 18,707 பேரும், கட்டுமான பொறியியல் பிரிவை 15,089 பேரும், கணினி அறிவியல் பிரிவை 15,056 பேரும் தேர்வு செய்தனர்.
குறைந்து வரும் ஒட்டுமொத்த மாணவர்கள் சேர்க்கை: கணினி அறிவியல் படிப்புகள் மீது ஆர்வம் குறைந்து வருவது போல, பொறியியல் கல்லூரிகளில் ஒட்டுமொத்த மாணவர்கள் சேர்க்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. கடந்த 2013-இல் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஒற்றைச்சாளர கலந்தாய்வில் 2,07,141 இடங்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் 1,27,838 இடங்கள் நிரம்பின. 79,303 இடங்கள் காலியாக இருந்தன.
இதுபோல, 2014-இல் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்தது. அப்போது இடம் பெற்றிருந்த 2,11,589 அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் 1,09,079 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,02,510 இடங்களில் சேர்க்கை நடைபெறவில்லை. 2015-இல் கல்லூரிகளின் எண்ணிக்கை 574 ஆகக் குறைந்தது. மாணவர்கள் சேர்க்கை இல்லாததால், 2 கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2,02,422-ஆக இருந்தது. இவற்றில் 1,07,969 இடங்கள் மட்டுமே நிரம்பின. 94,453 இடங்கள் காலியாக இருந்தன.
மேலும், அண்ணா பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி, 2015-16 பொறியியல் சேர்க்கை முடிவில், 33 கல்லூரிகளில் 60 சதவீத அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்கள் நிரம்பவில்லை. இந்தக் கல்லூரிகளில் முக்கியத் துறைகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்கள் சேர்க்கையின்றி காலியாக இருந்தன.
இந்த நிலை வருகிற 2016-17 கல்வியாண்டிலும் தொடரும் என பொறியியல் கல்லூரிகள் அஞ்சுவதால், பல பொறியியல் கல்லூரிகள் ஏராளமான துறைகளைக் கைவிட முடிவு செய்துள்ளன.
அதன்படி, வருகிற 2016-17 கல்வியாண்டில் தமிழகம் முழுவதிலுமிருந்து 30 கல்லூரிகள் 70 துறைகளைக் கைவிட விண்ணப்பித்துள்ளன. இதில் குறிப்பாக, பி.இ. தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல், ஏரோனாட்டிகல் போன்ற துறைகள் அடங்கும். மேலும், 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பல்வேறு துறைகளில் மாணவர்கள் சேர்க்கை இடங்களைப் பாதியாகக் குறைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக, கடந்த ஆண்டுகளைப் போலவே பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்களில் நூற்றுக்கணக்கானோர் வேலையை இழக்கும் நிலை உருவாகி இருப்பதாகவும், பல கல்லூரிகள் ஏற்கெனவே இந்த ஆள் குறைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாகவும் தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
4 பேராசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி!
பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் குறைந்து வருவதைத் தொடர்ந்து, ஆள் குறைப்பு நடவடிக்கைகளை கல்லூரிகள் தீவிரப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவே பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்து, மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.
இதனால், மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும், வருவாய்ப் பாதிப்பை ஈடுகட்டவும் பல்வேறு நடவடிக்கைகளை தனியார் பொறியியல் கல்லூரிகள் மேற்கொண்டு வருகின்றன.
பல கல்லூரிகள் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் தலா 2 மாணவர்களை ஒவ்வோர் ஆண்டும் சேர்த்தாக வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கின்றன. குறிப்பாக ஈரோடு, கோவை, திருப்பூர் பகுதிகளில் இந்த நிலை தொடர்கிறது. அவ்வாறு மாணவர்களைச் சேர்க்காத பேராசிரியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
இப்போது சென்னையில் உள்ள பிரபல கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதில் புதிய உத்தியை அந்தக் கல்லூரிகள் பின்பற்றுகின்றன. அதாவது, பணிபுரியும் அனைத்துப் பேராசிரியர்களுக்கும் தேர்வு நடத்தி, அதில் தேர்வு பெறுபவர்களை மட்டும் பணியில் வைத்துக் கொண்டு தேர்ச்சி பெறாதவர்களை நீக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
சென்னை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பிரபல கல்லூரியில் கடந்த வாரம் நடத்தபபட்ட இந்தத் தேர்வை 40 பேராசிரியர்கள் எழுதினர். அவர்களில் 4 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். கல்லூரிகளின் இந்த நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, தனியார் பொறியியல் கல்லூரிகளின் இந்த நடவடிக்கைகளில் பல்கலைக்கழகம் தலையிட முடியாது என்றனர்.
No comments:
Post a Comment