Pages

Thursday, January 28, 2016

மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்குமா?

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கடலுார் மாவட்டத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக பண்ருட்டி பகுதியில் ஒரே இரவில் 40 செ.மீ., மழை கொட்டியதால் ஓடையில் வீடு கட்டியிருந்த 2 குடும்பத்திலும் தலா 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 80க்கும் மேல் தாண்டியது. 

வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மாணவ, மாணவியர்கள் தங்கள் நோட்டு புத்தகங்களை இழந்தனர். முக்கிய பதிவேடுகள் பாழாகின. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இன்னமும் அதிலிருந்து மீள முடியாத மன நிலையில் உள்ளனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த உடன் பொதுத்தேர்வு செய்முறை தேர்வு தொடங்குகிறது. பொதுத்தேர்வு எழுதாத மற்ற மாணவர்கள் சரிவர பள்ளிக்குக் கூட வராத நிலை உள்ளது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புத்தகங்களுக்கு பதிலாக அரசு புதிய புத்தகங்கள் வழங்கி வருகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் பாதிப்புகள் அதிகம் இருப்பதையொட்டி சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ், ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டை போன்றவற்றிக்கு நகல் வழங்கப்பட்டு வருகிறது.

அதேப்போன்று கனமழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்டத்தில் வங்கிக் கடன், புதியதாக வட்டியில்லா கடன், பயிர்க்கடன் போன்றவை வசூலிப்பதை நிறுத்தி வைக்க அரசு சலுகை வழங்கியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் சிலருக்கு மட்டுமே நிவாரணத் தொகை, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு எதுவுமே கிடைக்காத நிலையில் மக்கள் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.

கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது 800க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதன்காரணமாக அரசு பல்வேறு உதவிகளை மேற்கொண்டது. அதில் ஒன்று கடற்கரையோரத்தில் வசிக்கும் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்று செலுத்தியது. அதேப்போல தற்போதும் கனமழையால் பாதிக்கப்பட்ட இம் மாவட்டத்தில் பயிலும் தனியார், அரசு பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்று செலுத்த வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.