Pages

Friday, January 15, 2016

தேசிய புதிய கல்விக் கொள்கைக்கான குழுவை மாற்றியமைக்க வலியுறுத்தல்

தேசிய புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் அடங்கிய குழு, அதன் விவாதப் பொருளை மாற்றியமைக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.
கோவை அவிலா மெட்ரிக் பள்ளியில் புதிய கல்விக் கொள்கை குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. 35 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் சுமார் 1200 பேர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் பங்கேற்க வந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய புதிய கல்விக் கொள்கையை உருவாக்கு வதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் தலைமையில் மொத்தம் 5 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இவர்களில் ஜெ.எஸ். ராஜ்புட் என்பவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர், மீதமுள்ள 4 பேரும் அரசுத்துறை அதிகாரிகளாக பணியாற்றியவர்கள். இந்தக் குழுவில் எந்தக் கல்வியாளரும் இடம்பெறவில்லை. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு இந்தக் குழு ஆய்வுகளை முடித்துள்ள நிலையில் வெளிப்படையாகவோ, பல்வேறு தரப்பு பொதுமக்களிடமோ நேரிடையாக கருத்து கேட்கவில்லை. அதற்குப் பதிலாக ஆன்-லைன் மூலமாக 2.75 லட்சம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக இந்தக் குழு தெரிவித்துள்ளது. இந்தக் குழு உருவாக்கியுள்ள கல்விக் கொள்கையானது கல்விக்கான மானியம், கல்விக் கடன் ஆகியவற்றை நிறுத்துவதற்கும், நமது நாட்டின் பல்வேறு கலாச்சாரம் பண்பாடு, மதச்சார்ப்பின்மை, தாய் மொழிகளை சிதைக்கும் விதமாகவும் உள்ளது. புதிய கல்விக் கொள்கைக்கான விவாதப் பொருள்கள், கற்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதத்திலேயே உள்ளது. குழுவின் தற்போதைய விவாதப் பொருளை பார்க்கும்போது, பெண் கல்வி என்பது மேம்பாடு அடையாமல் தடுக்கக் கூடிய விதத்தில் உள்ளது. முழுவதும் அரசு அதிகாரிகள் அடங்கிய அந்தக் குழு, புதிய கல்வி கொள்கை குறித்து முடிவெடுப்பது என்பது சரியாக இருக்காது. அதில், அனைத்து மாநிலங்களில் இருந்தும் கல்வியாளர்கள் இடம் பெற வேண்டும். அரசு நிர்வாகத்தில் பெறப்பட்ட கருத்துகளை நிராகரித்துவிட்டு, பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட வேண்டும். அதற்காக கூட்டங்களை கூட்டி விவாதிக்க வேண்டும். இதனை நாங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அந்தக் குழு தனது அறிக்கையை நேரிடையாக நாடாளுமன்றத்தில் வைத்து வேகமாக நிறைவேற்றுவதற்கு முயன்று வருகிறது. இது போன்ற முறையில் இந்த கல்விக்கொள்கை நடைமுறையானால், நாட்டின் பல மொழிக் கொள்கை, மதச்சார்ப்பின்மை அழிய வாய்ப்புள்ளது. மத்திய அரசு காவிமயம் சார்ந்த கல்வியை மறைமுகமாக திணிக்க முற்படுகிறது. மறைமுகமாக நடந்து வரும் இந்தப் பணிகளுக்கு மாநில கல்வித் துறையும் எவ்வித கருத்தும் வெளிப்படுத்தாமல் பணிகளை செய்து கொடுத்து வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க முடியும். இது குறித்து ஆசிரியர்களுக்கு விளக்குவதற்காக கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, அதன் ஒருங்கிணைப்பாளர் மார்ட் பவுல் ஆல்பர்ட், கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.எம். ஜான்கென்னடி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.