Pages

Monday, January 11, 2016

பிளஸ் 2 தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கூடாது!

பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளில், எக்காரணம் கொண்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது, என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தன் பேசினார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 


இதில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தன், பேசியதாவது: 

பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளில், அம்மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முதுகலை ஆசிரியர்கள், முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை. பலரும் உடல் நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டு, பணியிலிருந்து விடுவித்துக்கொள்கின்றனர். இப்பணிகளுக்கு, பத்தாம் வகுப்பு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம், அம்மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதில் சிக்கல் உருவாகிறது. 

தேர்வுக்கு முன் ஒரு மாதம் வரை, சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர் தேர்வுக்கு சென்றுவிடுவதால், மாணவர்களுக்கும் பின்னடைவு உருவாகிறது. இதை தவிர்க்க, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளில், எக்காரணம் கொண்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது. முதுகலை ஆசிரியர்களை முழுமையாக நியமித்தும், இடைநிலை, தொழிற்கல்வி, சிறப்பாசிரியர்களை கொண்டுமே, பிளஸ் 2 தேர்வை நடத்திவிட முடியும். இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள் திருத்தும் பணியில், விடைத்தாளுக்கு, 10 ரூபாய் வழங்கிட வேண்டும். சி.பி.எஸ்., முறையை அறவே ஒழித்திட வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை மத்திய அரசு வழங்கிய உடன், மாநில அரசு அமல்படுத்த வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., பிழைப்பூதியத்தை மூன்று மடங்கு உயர்த்த வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு தொடங்கும் நேரத்தை, பிளஸ் 2 போலவே, 10 மணிக்கு மாற்றியமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.