Pages

Monday, December 21, 2015

சிபிஎஸ்சி பாட புத்தகங்கள் இலவசமாக ஆன்லைனில் வெளியிட திட்டம்: ஸ்மிருதி இரானி

மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்சி) அனைத்து பாட புத்தகங்களையும் இலவசமாக ஆன்லைனில் வெளியிட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து கிழக்கு தில்லியின் கிச்சிரிப்பூர் பகுதியில் அமைந்துள்ள கேந்திரீய வித்யாலயா பள்ளியில் நடந்த புதிய கட்டிட திறப்பு விழாவில் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:


தொடக்க கல்வியையும், தொழிற்கல்வியையும் வழங்கிவரும் தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயற்சிக் குழுவின் புத்தகங்கள் ஒரு மாதத்துக்கு முன்பு இலவச மின்னணு புத்தகமாகவும், செல்போன் செயலிகள் மூலமாகவும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதேபோல, சிபிஎஸ்சி புத்தகங்களும் ஆன்லைனில் விரைவில் வெளியிடப்படும்.

சிறார்கள் மாநாடுகளை (பால சபா) நடந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த மாநாடுகள், பல்வேறு துறை சார்ந்த நபர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடும் வகையில் அமையும்.

கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் "சாலா தர்பன்', "சாரணாஸ்' என்று இரண்டு சேவைகளை தொடக்க இருக்கிறோம். "சாலா தர்பன்' மூலம் மாணவர்களின் வருகைப் பதிவேடு குறுஞ்செய்தி மூலம் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

"சாரணாஸ்' சேவை மூலம் மற்ற மாவட்ட, மாநில மாணவர்கள் பாடரீதியாக பெற்ற மதிப்பெண்களுடன், தங்களது மகன் அல்லது மகள் பெற்ற மதிப்பெண்களை பெற்றோர்கள் ஒப்பீடு செய்து பார்க்க முடியும் என்றார் ஸ்மிருதி இரானி.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறுகையில், சிறந்த மனிதர்களாக மாணவர்களை உருவாக்கும் பொறுப்பை கல்வி நிறுவனங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.