மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகளை பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடுவது எனவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. வெள்ளப் பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயங்கி வரும் இணைப்புக் கல்லூரிகளுக்கு நடத்தப்பட இருந்த பருவத் தேர்வுகளை சென்னைப் பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.
ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்வுகளுக்கான மறு தேதியை முடிவு செய்வது, அடுத்த பருவ வகுப்புகளை எப்படி நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக பதிவாளர் டேவிட் ஜவஹர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து இணைப்புக் கல்லூரி முதல்வர்களும் பங்கேற்றனர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் திருமகன் கூறியதாவது:
வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டத் தேர்வுகளை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிப்பது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் தேர்வுக்கான மறு தேதிகள் இறுதி செய்யப்பட்டு, பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 6-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. மேலும், தேர்வுத் தாள் திருத்தும் பணிகளை வேகமாக நிறைவு செய்து பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்வின்போதே வகுப்புகள்: தொடர் விடுமுறை காரணமாக அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் பருவத் தேர்வுகள் நடைபெறும்போதே, தேர்வு இல்லாதவர்களுக்கு வகுப்புகளை நடத்துமாறு கல்லூரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பொதுவாக, பருவத் தேர்வு நடைபெறும்போது வகுப்புகள் நடத்தப்படாது. ஆனால், இந்த முறை இதற்கு அனுமதித்துள்ளோம். தேவைப்பட்டால் கூடுதல் நேரம் வகுப்புகளை நடத்துமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.