Pages

Monday, November 30, 2015

'கேட்' தேர்வு: பி.இ.,க்கள் ஆர்வம்

மத்திய அரசின், உயர் கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான 'கேட்' தேர்வில், சென்னையில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இவர்களில், பி.இ., எனப்படும், இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் அதிகம்.


300 மையங்களில்...:வரும் கல்வி ஆண்டில், எம்.பி.ஏ., படிப்பதற்கான, கேட் எனப்படும், பொது மாணவர் சேர்க்கை தேர்வு,நாடு முழுவதும், 300 மையங் களில் நேற்று நடந்தது. 2.19 லட்சம் பேர் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். மூன்று தாள்கள், தலா ஒரு மணி நேர, 'ஆன்லைன்' தேர்வு நடந்தது.

தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில், 30 தேர்வு மையங்களில், இந்த தேர்வு நடந்தது. சென்னையில், 10 ஆயிரம் பேர் உட்பட, தமிழகத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

80 சதவீதம்இவர்களில், 80 சதவீதம் பேர், பி.இ., இறுதி ஆண்டில் படிக்கும் அல்லது கடந்த ஆண்டு, பி.இ., முடித்தவர்கள்.அதிகமானோர் எழுத காரணம்இந்த தேர்வு, 2007ல் துவங்கிய போது, 2.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். பின், படிப்படியாகக் குறைந்தது. 2014ல், 1.96 லட்சம் பேர் பங்கேற்றனர்; இந்த ஆண்டு, 2.19 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

இதுகுறித்து, ஐ.எம்.எஸ்., எனப்படும், முன்னணி தனியார் பயிற்சி மையம் ஒன்றின், சென்னை மைய இயக்குனர் டோனி சேவியர் கூறுகையில், ''ஐ.ஐ.எம்., எண்ணிக்கை, 19 ஆக அதிகரித்துள்ளதால், இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது; தேர்வும் கொஞ்சம் எளிதாகியுள்ளது. இன்ஜி., மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் வருவதால், எம்.பி.ஏ., படிக்க விரும்புகின்றனர். இந்த விழிப்புணர்வு சமீப காலமாக அதிகரித்துள்ளது,'' என்றார்.

வணிகவியல் படிப்புக்குஇன்ஜினியர்கள் ஆசை:எம்.பி.ஏ., எனப்படும் மேலாண் நிர்வாக படிப்பு, வெறும் வணிகவியல் தொடர்பான படிப்பாக இருந்த நிலை மாறி, தற்போது அனைத்து பட்டதாரிகளுக்கும் தேவையான படிப்பாக மாறி விட்டது. பி.இ., - பி.டெக்., மாணவர்கள், எம்.பி.ஏ., படிக்க அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

அதிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் படிக்க, இன்ஜி., பட்டதாரிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.எம்.பி.ஏ., படித்தால் தனியார் நிறுவனங்களில், ஆரம்பத்திலேயே அதிக சம்பளத்துடன் வேலை கிடைப்பதோடு, பதவி உயர்வுக்கும் வாய்ப்புகள் உள்ளதே காரணம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.