தமிழ்நாடு மின் வாரியம், ஆண்டு தோறும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், மின் கட்டண உயர்வு குறித்து, ஆணையம் முடிவு செய்யும். நடப்பு ஆண்டில், இதுவரை மின் வாரியம், வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்யாததால், ஆணையம், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.
ஒழுங்கு முறை ஆணையம்:
தமிழகத்தில், மின் கட்டணம் உயர்த்தும் அதிகாரம், தமிழக அரசிடம் இருந்தது. 2003 மின்சார சட்டப்படி, மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு மாற்றப்பட்டது. தமிழ்நாடு மின் வாரியம், 'அக்ரிகேட் ரெவன்யூ ரெக்கொயர்மென்ட்' என்ற மொத்த வருவாய் தேவை அறிக்கையை, ஆண்டுதோறும் நவ., 30ம் தேதிக்குள், ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த அறிக்கையில், மின் உற்பத்தி, மின் விற்பனை, மின் கொள்முதல், எரிபொருள் செலவு, வட்டி, கடன், புதிய திட்டம் என, மின் வாரியத்தின் அனைத்து விவரங்களும், ஏப்ரல் முதல், அக்டோபர் வரை துல்லியமாக இருக்கும்.
நவம்பர் முதல், மார்ச் வரையும், அடுத்த நிதி ஆண்டிற்கான விவரங்கள், உத்தேசமாக இடம் பெற்றிருக்கும். மின் வாரியம், வருவாய் தேவை அறிக்கையுடன், மின் கட்டணம் உயர்த்தும் மனுவையும், ஆணையத்திடம் அளிக்க வேண்டும். இந்த மனுவை அளிக்காவிடில், ஆணையம், வருவாய் தேவை அறிக்கையை ஆய்வு செய்து, வரவை விட செலவு அதிகம் இருந்தால், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, தானாகவே மின் கட்டணத்தை உயர்த்தும். செலவை விட, வரவு அதிகம் இருந்தால், கட்டணத்தை குறைக்கும் அல்லது அதே கட்டணத்தில் தொடரவும் அனுமதிக்கும்.
தமிழ்நாடு மின் வாரியம், தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. எனினும், 2014 நவம்பருக்குள், மின் வாரியம், வருவாய் தேவை அறிக்கையை, தாக்கல் செய்யாததால், ஆணையம், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, அதே ஆண்டு டிச., 11ல் மின் கட்டணத்தை, 15 சதவீதம் உயர்த்தியது. தற்போது, மின் வாரியத்தின் கடன், ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளது. நவ., 30க்குள் வாரியம், வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிடில் மீண்டும், ஆணையம் தானாகவே மின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.
நடவடிக்கை:
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் வாரியம், 2014 நவம்பர் மாதம் தாக்கல் செய்ய வேண்டிய, வருவாய் தேவை அறிக்கையை, ஆணையத்திடம் இதுவரை தாக்கல் செய்யவில்லை. ஆனால், ஆணையம், மின் கட்டணத்தை உயர்த்தியது. அதே நிலை, தற்போதும் நடக்க வாய்ப்புள்ளது. அறிக்கையை தாக்கல் செய்யாத மின் வாரியம் மீது, ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம்.
தமிழகத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், மின் கட்டணம் உயர்த்தப்படுமா என்ற சந்தேகமும் உள்ளது. அனைவருக்கும் மின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை என்றாலும், தொழிற்சாலை, வணிகம் என, சில பிரிவுகளுக்கு மட்டும் உயர்த்தப்படலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
கண்டிப்பு தேவை:
தனியாரிடம் அதிக விலைக்கு மின் கொள்முதல், மின் நிலைய தொடர் பழுது, வீண் நிர்வாக செலவு போன்ற காரணங்களால், மின் வாரியம் கடனில் இருந்து மீளாமல் உள்ளது. இதை, கண்டிக்க வேண்டிய ஆணையத்தின் முக்கிய பொறுப்பில், முன்னாள் மின் வாரிய அதிகாரிகள் உள்ளனர்.இதனால், ஆணையத்தால், மின் வாரிய தவறான முடிவுகளை கண்டிக்க முடியவில்லை. நீதிமன்ற அதிகாரம் உள்ள ஆணைய அதிகாரி கள், பழைய பாசத்தை விட்டு, மின் வாரியத்தை கண்டிக்க வேண்டும்; அப்போது தான் நிலைமை சீராகும்.
No comments:
Post a Comment