Pages

Thursday, November 19, 2015

18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு: தேர்தல் ஆணையம் பரிந்துரை

தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்பதை உறுதி செய்ய, 18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.



இப்போதுள்ள விதிகளின் படி ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு 18 வயதை எட்டியவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு அந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க முடியும். ஜனவரி 2-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள், தேர்தல் நடைபெறும்போது 18 வயதை எட்டியிருந்தாலும் கூட அந்த ஆண்டு வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள முடியாது.

எனவே இதனை மாற்றி, 18 வயதை எட்டிய அனைவரையும் உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக சட்ட அமைச்சக அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.

அதேநேரத்தில் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வர சட்ட அமைச்சகம் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்துவது இந்த விஷயத்தில் உதவாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும். இப்போதுள்ள விதிகளின்படி 18 வயதை எட்டியவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டிலேயே தேர்தல் ஆணையம் இத்திட்டத்தை பரிசீலித்தது. அப்போது சட்ட அமைச்சகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகியின் கருத்து கேட்கப்பட்டது. அவரும் சட்ட அமைச்சகத்துக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை, அரசமைப்புச் சட்டத்தின் 326-ஆவது பிரிவுடன் முரண்படுகிறது என்று அவர் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.