Pages

Monday, November 2, 2015

கல்வித் துறை அலுவலர்களின் கோரிக்கைகளை முதல்வர் 100 சதம் நிறைவேற்றுவார்

பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகளை, முதல்வர் ஜெயலலிதா 100 சதவீதம் நிறைவேற்றுவார் என, மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க திண்டுக்கல் மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவர் வெ. சம்பந்தம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அ. சிவக்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மின்துறை அமைச்சர் நத்தம் இரா. விஸ்வநாதன், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகத்தின் மாநிலத் தலைவர் பொ. சௌந்தரராஜன், பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எஸ். ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அனைத்துத் துறைகளிலும் இணை இயக்குநர், துணை இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டது போல், பள்ளிக் கல்வித் துறையிலும் ஏற்படுத்த வேண்டும். நீதிமன்ற வழக்குகளுக்காக மாவட்டந்தோறும் சட்ட அலுவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் திரளாகக் கலந்துகொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, இக் கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்து நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும் என நிர்வாகிகள் சார்பில், அமைச்சர் நத்தம் விசுவநாதனிடம் வலியுறுத்தப்பட்டது.
அமைச்சர் நத்தம் இரா. விஸ்வநாதன் பேசியதாவது: மாவட்டக் கல்வித் துறை அலுவலக வளாகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உடனடியாக ஏற்படுத்தப்படும். கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு பொதுப்பணித் துறை மூலம் கருத்துரு பெற்று, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
பள்ளி கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல்வர் ஜெயலலிதா 100 சதவீதம் நிறைவேற்றுவார் என்றார்.
கூட்டத்தில், எம்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, வேணுகோபாலு, மேயர் மருதராஜ், பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலர் த.ல. சீனிவாசன், பொருளாளர் ப. நீதிமணி, இணைச் செயலர் பா. மணிவண்ணன், மாவட்டப் பொருளாளர் சே. முகமது ரபீக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.