Pages

Monday, October 19, 2015

தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 1934 ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது ஒரு அரசு உதவி பெறும் பள்ளி ஆகும்.சுதந்திரம் வாங்குவதற்கு முன்பாகவே இந்த சமுதாயம் கல்வி அறிவு பெற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு இப்பள்ளி துவங்கப்பட்டது.

இப்பள்ளியில்  பின்தங்கிய சமுதாய   மாணவர்களின் கல்வி மீது அக்கறை கொண்டு அவர்களை ஊக்கபடுத்தி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பயில வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பள்ளி ஆகும். 


நேரடியாக மாணவர்களை தேடி செல்லல்

எந்த விதமான ஏற்ற தாழ்வுகளும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் அமைக்கப்பட்டது தான் பள்ளிக் கூடம்.தமிழக அரசின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடியாக சமுதயாத்தில்  மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிகுறவ சமுதாய இன மக்கள்,ஜோசியம் பார்க்கும் தொட்டிய நாயக்கர் ( ஊர்,ஊராய் சென்று குறி சொல்பவர்கள் )சமுதாய மாணவர்கள் ,இலங்கை அகதிகள் முகாம் மாணவர்கள் என அனைவரையும்   அவர்களின் இருப்பிடம் தேடி சென்று கலை நிகழ்ச்சிகள் வாயிலாக கல்வியின்  புதிய அனுபவத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி  அவர்கள் பிள்ளைகளையும் இப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்கள்  என்பதை பெருமையுடன் சொல்ல முடியும்.


தினம்தோறும் அனுபவ கற்றல் 


இப்பள்ளியில் பயின்று வரும் இளம் வயது மாணவர்களுக்கு கல்வியை அனுபவத்தோடு கற்று கொடுத்து வருகிறார்கள்.கற்றலை அனுபவத்தோடு கற்கும்போது வாழ்க்கையின் எந்த சுழலிலும் மறக்காது.வாழ்க்கையின் என்றுமே மறக்க கூடாது என்ற நோக்கில் தான் கல்வி சார்ந்த நிறைய நிகழ்வுகளை பள்ளியிலும் ,களப்பயணமாக புத்தக திருவிழா,அஞ்சலகம்,வங்கி,நூலகம்,அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் என முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று வெளியிலும் கற்றலின் அனுபவத்தை புதுமையாக்கி வருகின்றார்கள் .மாணவர்களுக்கு புதிய ,புதிய அனுபவங்களை தினம்தோறும் கற்று கொடுத்து வருகிறார்கள் . 

இசை ,நடனம் மூலம் புதுமை  கற்பித்தல்

இப்பள்ளியில் மாணவர்களுக்கு திருக்குறள்,அபிராமி அந்தாதி போன்றவற்றை இசையோடு நடனம் மூலம் புதிய முறையில் பல்வேறு கலைகளை கற்பித்து வருகிறார்கள்.கலைகளின் மூலம்  கற்கும் இளம் வயது மாணவர்கள் இது தொடர்பான வல்லுனர்கள் வரும்போது ஒன்றாம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு  மாணவ,மாணவியர் கூட அவர்களிடம் மிக எளிதாக கேள்விகள் கேட்டு பதில் பெறுவதை பார்த்து,இது தங்கள் அனுபவத்தில் புதுமையாக உள்ளது எனக் கூறி வல்லுனர்கள்  வியப்பில் செல்கின்றனர். மாணவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் உள்ள நிபுணர்களை பள்ளிக்கே வரவழைத்து குறிப்பாக தமிழக புள்ளியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு இ .ஆ.ப.,தேவகோட்டை உதவி கலெக்டர் சிதம்பரம்,கணேசன், தமிழ்நாடு மின்சார துறை பொறியாளர் சந்திரசேகர்,பொம்மலாட்ட ஆசிரியர் தாமஸ் ஆண்டனி ,திருக்குறள் நடனம் சொல்லும் சுந்தர மகாலிங்கம்,தமிழ்நாடு அறிவியல் மையத்தின் திருச்சி அண்ணா கோளரங்க இயக்குனர் லெனின் தமிழ் கோவன் உட்பட பல்வேறு நிபுணர்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி  புதிய அனுபவத்தை வழங்கியதுடன் அவர்களிடம் பேசியவர்களுக்கும் புதிய அனுபவம் கிடைத்ததாக கூறி செல்கின்றனர். 

 வார,வாரம் மற்றும் மாத திருவிழாக்கள் 

இப்பள்ளியில் வாரா, வாரம் மாணவர்களுக்கு பேச்சு,கவிதை,ஓவியம்,மனக்கணக்கு ,புதிர்கணக்கு,வாசிப்பு போன்று பல்வேறு தலைப்புகளில் போட்டிகளை மாதம் ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதனை வாரம்தோறும் போட்டியாக நடத்தி மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறோம்.  மேலும் மாதா,மாதம் பாடங்கள் சார்ந்த வினாடி வினா மாதம் ஒரு பாடம் என எடுத்துக் கொண்டு மாத கடைசியில் போட்டிகள் நடத்தி வருகிறோம்.இதனில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பங்கு கொண்டு வெற்றி பெற்று பரிசு பெறுகின்றனர்.ஒரு முறை பரிசு பெற்ற மாணவர் அடுத்த முறை பார்வையாளராக  மட்டுமே இருக்க முடியும் என தெரிவித்துள்ளதால் அனைத்து மாணவர்களும் போட்டிகளில் கண்டிப்பாக பங்கெடுத்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களின் இளம் வயது மனதில் விதைத் துள்ளோம்.இத்திருவிழாக்கள் மாணவர்கள்  மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


மாணவர்களின் திறமைகளை ஊடகங்களின் வாயிலாக வெளிபடுத்துதல் 

இப்பள்ளி மாணவர்கள் தாங்கள் பெற்ற அனுபவத்தை நாளிதழ்களில்,வார இதழ்களில் ,மாத இதழ்களில்,வானொலி,தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக கட்டுரைகளாக ,கவிதைகளாக,ஓவியமாக , கதைகளாக தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி  1ம் ஆண்டு நிறைவு  பேச்சு போட்டியில் இப்பள்ளி மாணவி வெற்றி 

நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் சார்பாக நடைபெற்ற 1ம் ஆண்டு நிறைவு விழா பேச்சு போட்டி மதுரையில் நடைபெற்றது.இதில் சுமார் 5 மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இன்று அரசு விடுமுறையாக இருந்த போதும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்தின் ஆலோசனையின் படி ஆசிரியை திருமதி தி.முத்து  மீனாள் மற்றும் ஆசிரியர் திரு.சோமசுந்தரம் ஆகியோர் காலை 5.30 மணிக்கு மாணவர்களை தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு அழைத்து சென்றனர்.இவர்களது பெற்றோர் யாரும் வர இயலாத நிலையில் தினசரி வேலைக்கு சென்றால்தான் சம்பளம் கிடைக்கும் என்கிற நிலையில் ஆசிரியர்களே இவர்களை போட்டிக்கு அழைத்து சென்றனர்.6 முதல் 8 வகுப்பு வரை உள்ள பிரிவில் 20 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.இதனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து கலந்து கொண்ட ஒரே  பள்ளி ஆகும். 20 பேரில் இப்பள்ளி மாணவர்கள் 5 பேர் தவிர மீதமுள்ள அனைவரும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆவார்கள்.தனியார் பள்ளி மாணவர்களுடன் அரசு உதவி பெறும்   இப் பள்ளி மாணவர்கள் போட்டி போட்டு பேசி மாணவி மு.தனலெட்சுமி என்பவர் வெற்றி பெற்றார்.இவர் வரும் 25 ம் தேதி சென்னையில் நடைபெறும் இறுதி சுற்றில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.இவரது தாயார் வீட்டு வேலை செய்து வரும் சொற்ப பணத்தில் இவரை படிக்க வைக்கிறார்.போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்கி கொண்டு மாணவர்களும்,ஆசிரியர்களும் வீட்டுக்கு வந்த சேர்ந்த நேரம் இரவு 9 மணி ஆகும்.இப்பள்ளி ஆசிரியர்களும்,தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கமும் இணைந்து தான் இம்மாணவர்களை தொடர்ந்து ஊக்கபடுத்தி போட்டிகளில் வெற்றி பெற வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களை நாமும் பாராட்டுவோமாக. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.