Pages

Friday, October 16, 2015

பதவி உயர்வு எப்போது? முதுநிலை ஆசிரியர்கள் தவிப்பு

முதுகலை பட்டம் பெற்றுள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களால், 20 ஆண்டுக்குப் பின்னரே, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடிகிறது. அதுவும், பணிமூப்பு அடிப்படையில் தான் கிடைக்கிறது. சீனியாரிட்டி இல்லாதவர், ஓய்வு பெறும் வரை, முதுநிலை பட்டதாரி ஆசிரியராகத் தான் இருக்க வேண்டும்.

இந்த வேறுபாட்டால், பட்டதாரியாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில், அவர்களை விட அதிகமாக படித்துள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றும் நிலை ஏற்படுகிறது; ஊக்க ஊதியத்திலும் முரண்பாடு இருக்கிறது.

இந்த வேறுபாடுக்கு காரணமான, அரசாணையை மாற்றக் கோரி, முதுநிலை ஆசிரியர்கள், 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்; ஆனால், பிரச்னை தீர்க்கப்படவில்லை. இந்த கோரிக்கையையே, அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. 

இதுகுறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் கூறுகையில், ''இந்தப் பிரச்னையை தீர்க்க, முன்னாள் இயக்குனர்கள் கருணாகரன் மற்றும் ஜெகநாதன் தலைமையில், இரண்டு கமிட்டிகளை, அரசு அமைத்தது. இதுவரை, அதன் அறிக்கையை வெளியிடாமல் கிடப்பில் வைத்துள்ளது,'' என்றார்.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,200 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கான, இடமாறுதல் கலந்தாய்வு, இன்று நடத்தப்படுகிறது. 

இதில், 650 இடங்களை நிரப்ப அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பு இருப்பதால், முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் பங்கேற்க, ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர்.

எனவே, காலியிடங்களை நிரப்ப, பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து, தொகுப்பூதியம் கொடுத்து, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

3 ஆண்டுகளில்...
அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், 10 ஆண்டுகளுக்கு பின், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். அதில், மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின், பணிமூப்புப்படி, மாவட்ட கல்வி அதிகாரி அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நியமிக்கப்படுகின்றனர். அதன்பின், மூன்று ஆண்டுகளில், முதன்மை கல்வி அதிகாரியாக முடியும்.

1 comment:

  1. பொய் சொல்லாதீர்கள் 2001 ம் ஆண்டு தேர்வானவர்களுக்கே தற்போது பதவி உயர்வு வருகிறது அதுபோல 3 ஆண்டுகளில் மாவட்டகல்வி அலுவலர்பதவி பெறுகின்றனர் என்பதும் தவறான தகவல் அதிகம்படித்துள்ளீர்கள் என்றால் மாவட்ட ஆட்சியர் பதவி கேட்க வேண்டியது தானே அவர் இளநிலைபட்டம் மட்டுமே படித்துள்ளார் பொய் சொல்லியே தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் முட்டாளாக்காதீர்கள்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.