தேர்வு மையத்தில் இருந்து, திருத்தும் மையத்துக்கு விடைத்தாள்களை பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், முசிறி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2010-ஆம் ஆண்டு இயற்பியல் தேர்வு எழுதிய 262 மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் வழியில் மாயமானது. பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட 262 பேருக்கும் இழப்பீடு அளிக்க உத்தரவிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் முருகேசன் மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: முசிறியில் இருந்து விடைத்தாள்களை அனுப்பிய முறையைப் பார்க்கும் போது கவனக் குறைவாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் அனுப்பியது தெரிகிறது. விடைத்தாள்கள் காணாமல் போனால் மாணவர்களும் பெற்றோர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.
எனவே இது போன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்கும் விதமாக விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு பாதுகாப்பான புதிய வழிமுறையை அரசு உருவாக்கவேண்டும். இழப்பீடு கோருவதற்கு கீழமை நீதிமன்றத்தை மனுதாரர் அணுகவேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.