Pages

Tuesday, October 6, 2015

இடவசதியற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க எதிர்ப்பு!

இடவசதியற்ற தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கும்பகோணம் பள்ளியில், 94 குழந்தைகள் பலியான விபத்துக்கு பின், போதிய இடவசதி இல்லாமல் இயங்கும் தனியார் 
பள்ளிகளுக்கு, 11 ஆண்டுகளாக அங்கீகாரம் வழங்கவில்லை.


இப்போது இடவசதியற்ற, 746 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு, கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலரும், மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனருமான, பாடம் நாராயணன், பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதாவுக்கு அனுப்பியுள்ள மனு: கடந்த, 2004ல், நீதிபதி சிட்டிபாபு கமிட்டி அறிக்கைப்படி, விதிமுறைகளைப் பின்பற்றாத, இடப்பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு, உள்கட்டமைப்பை சரிசெய்ய, நான்கு ஆண்டுகள் அவகாசம் தரப்பட்டது.


பின், 2006ல் கும்பகோணம் பள்ளி விபத்து குறித்து விசாரித்த நீதிபதி சம்பத் கமிட்டி அளித்த பரிந்துரைகளையும் அரசு ஏற்றது. அதில், இடவசதி இல்லாத, விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரக்கூடாது என, கூறப்பட்டு இருந்தது.அதை ஏற்றுக்கொண்ட அரசு, உள்கட்டமைப்பு விதிமுறைகளை வகுத்தது; இடவசதியற்ற பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இப்படி, உள்கட்டமைப்பை உயர்த்த, 11 ஆண்டுகளாக அவகாசம் அளித்து விட்டு, இப்போது பாதுகாப்பு விதிமுறைகளையும், இரண்டு நீதிபதிகளின் அறிக்கையையும் மீறி, இடவசதியற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது சட்ட விரோதம். இந்த அரசு உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.