Pages

Thursday, October 29, 2015

அரசு பள்ளிக்கு மட்டும் மாறிய எஸ்.எஸ்.ஏ., திட்டங்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சேர்த்து நடத்தப்பட்ட எஸ்.எஸ்.ஏ., திட்ட பயிற்சி, மற்றும் போட்டிகள் தற்போது அரசு பள்ளிக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாணவர்களின் திறன் வளர்ப்பை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் உதவி பெறும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு வரை இந்த நடைமுறை தான் அமலில் இருந்தது. தற்போது அரசு பள்ளிகளுக்கு மட்டுமே இப்பயிற்சி, போட்டி நடத்தப்பட்டு வருகின்றன.


கடந்த 14-ம் தேதி கைகழுவும் தினத்தை முன்னிட்டு, தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி ஒன்றிய அளவில் எஸ்.எஸ்.ஏ., சார்பில் பயிற்சி நடத்தப்பட்டது. இதில், உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்படவில்லை. நேற்று முன்தினம் தொடக்க, நடுநிலை பள்ளி அளவில் நடந்த ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டியில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு, சின்னையா அம்பலம் நடுநிலை பள்ளியில் நடந்தது. இதில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படவில்லை. ஆசிரியர்களை தொடர்ந்து, உதவி பெறும் பள்ளியை சேர்ந்தவர்களும் எஸ்.எஸ்.ஏ.,வால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது: தேவகோட்டை ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட உதவி பெறும் தொடக்க நடுநிலை பள்ளிகள், சாக்கோட்டை ஒன்றியத்தில் 35 பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 3500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். அரசு பள்ளியை போன்றே உதவி பெறும் பள்ளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதுதான் இதுவரை நடைமுறையில் இருந்தது. தற்போது உதவி பெறும் பள்ளிகளை புறக்கணிக்கின்றனர். மாணவர்கள் நலனை அரசு கருத்தில் கொள்ள வேண்டும், என்றார்.

அதிகாரி ஒருவர் கூறும்போது: அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், அரசு பள்ளிகளுக்கு மட்டும் எஸ்.எஸ்.ஏ., பயிற்சி மற்றும் போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவி பெறும் பள்ளியை பொறுத்தவரை அவர்களுக்கு என்று தனி நிர்வாகம் உள்ளது. அவர்கள் மாணவர் நலனில் அக்கறை கொண்டு போட்டிகளை நடத்த வேண்டும். நிர்வாகிகள் பள்ளிகளின் மீது அக்கறை செலுத்த வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.