“ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்துவதை பெரும் அவமானமாக அரசு கருத வேண்டும்” என்று ராமதாஸ், இளங்கோவன், முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: மாணவர்களின் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் முதலமைச்சரோ, கல்வி அமைச்சரோ ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், அகம்பாவத்தின் உச்சத்தில் இருக்கும் தமிழக அரசு அவ்வாறு செய்யவில்லை. மாறாக பள்ளிகள் வழக்கம் போல இயங்கின என்று பொய்யான தகவல்களை பரப்புகிறது. உண்மையில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
எதிர்கால தலைமுறையினரை உருவாக்கும் ஆசிரியர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்துவதை பெரும் அவமானமாக அரசு கருத வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்: வகுப்பறையில் மாணவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக தெருக்களில் நின்று போராட வேண்டிய அவலம் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு ஜேக்டோ” அமைப்பு தயாராக இருந்தும் யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை. எந்த முடிவையும் முதல்வர்தான் எடுக்க ேவண்டும் என்ற அவல நிலையில், முதல்வரை அமைச்சர்களே பார்க்க முடியவில்லை.
ஆசிரியர்களுக்கு பதில் அங்கன்வாடி பணியாளர்களை வைத்து பள்ளிகளை நடத்த திட்டமிட்டுள்ளது, கடந்தகால ஜெயலலிதா ஆட்சியில் ‘’எஸ்மா” சட்டத்தை நினைவுபடுத்துகிறது. இந்நிலை நீடித்தால் 1996 தேர்தலில் எத்தகைய தோல்வியை ஜெயலலிதா சந்தித்தாரோ, அதற்கு சற்றும் குறையாத படுதோல்வியை 2016 தேர்தலில் சந்திப்பதிலிருந்து தப்ப முடியாது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மிரட்டி நிர்பந்திக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது ஆசிரியர்களை ஆத்திர மூட்டியுள்ளது.
இது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும், ஜனநாயக நெறிமுறைகளையும் நிராகரிக்கும் செயலாகும். 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரசின் பொதுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கையில் ஆசிரியர்களை தொடர் போராட்டத்திற்கு தள்ளிவிடுவது, மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.