Pages

Sunday, October 4, 2015

"ஆசிரியர்களை மதிக்கும் பண்பை பெற்றோர் கற்றுத் தர வேண்டும்"

ஆசிரியர்களை மதிக்கும் பண்பினை, தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுத் தர வேண்டும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. மதிவாணன். மயிலாடுதுறை வட்டம், சேத்தூர் கிராமத்தில், காமராஜர் அறக்கட்டளை தொடக்கம் மற்றும் திருவள்ளுவர் நூலகக் கட்டடம் அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்குரைஞர் முருக. மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற நீதிபதி டி.மதிவாணன் மேலும் பேசியது:

கிராமங்களில் தொடக்கப் பள்ளிகளை தோற்றுவித்து, மதிய உணவையும் வழங்கியவர் கர்மவீரர் காமராஜர். மதிய உணவை சாப்பிட்டு கல்வியைக் கற்றவர்கள் தற்போது மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ளனர். பெற்றோர் தங்களது குழந்தைகளின் கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், சான்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்கும் பண்பையும் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுத் தர வேண்டும். அப்போதுதான், சிறந்த மாணவர் சமுதாயம் உருவாகும் என்றார் அவர். தொடர்ந்து, சேத்தூர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அவர் பரிசுகள் வழங்கினார். நாகை மாவட்ட நீதிபதி கே. சிவக்குமார், வழக்குரைஞர் என்.கே. கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சித் தலைவர் ஜி. கண்ணதாசன் ஆகியோர் விழாவில் பேசினர். வழக்குரைஞர்கள் எம். நிர்மல்குமார், கே.ஆர். ரமேஷ்குமார், ஏ. நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக, அறக்கட்டளையின் செயலர் க. நெடுஞ்செழியன் வரவேற்றார். நிறைவில் அறக்கட்டளையின் நிறுவனரும், வழக்குரைஞருமான ஆர். மெய்வர்ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.