Pages

Tuesday, October 27, 2015

மனிதர்களுக்கு ஓரறிவே!

மனிதர்களுக்கு ஐம்புலன் அறிவு இருப்பதாக இதுவரை நமக்கு சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை கருதப்பட்டது போல மனிதர்களுக்கு ஐம்புலன் அறிவு கிடையாது, அவர்களுக்கு இருப்பது ஓரறிவே என டான் காட்ஸ் என்ற நரம்பியல் விஞ்ஞானி தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பிராண்டெய்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் அவர், சுவை அறிவுக்கும், நுகரும் அறிவுக்கும் இடையிலான தொடர்பைக் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.


2009-ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் மூலம், எலிகளின் சுவையுணரும் அறிவு குறையும்போது அதற்கேற்ற வகையில் அவை தங்களது நுகரும் அறிவை மாற்றிக் கொள்கின்றன என்று அவர் தெரிவித்தார். "கரண்ட் பயாலஜி' அறிவியல் இதழில் வெளியான அவரது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மூளையில் சுவையறியும் திறன் அகற்றப்படும்போது என்ன நிகழ்கிறது என்பதைக் கண்டறியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதற்காக, நாவில் பட்ட உணவின் சுவையை நரம்புகள் வழியாக உணர்ந்து கொள்ளும் எலியின் மூளைப் பகுதி நவீன கருவிகள் மூலம் செயலழிக்கச் செய்யப்பட்டது.

இவ்வாறு சுவையுணர்வு நிறுத்தப்பட்ட உடனே, நுகரும் வாசனைகளை உணர்ந்து கொள்ளும் மூளைப் பகுதிகள் தங்களது இயக்கத்தின் தன்மையை வேகமாக மாற்றிக் கொண்டன. இதன் மூலம், சுவையுணர்வும், நுகர்வுணர்வும் தனித் தனி அறிவுகள் இல்லை, அது ஒரே அறிவின் இருவேறு அங்கங்கள் என்பது தெரிய வருகிறது. ஏற்கெனவே ஒலியுணர்வு, தொடு உணர்வு, காண் உணர்வு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை வெவ்வேறு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதைக் கொண்டு, ஐந்து அறிவுகள் என்று கூறப்படுவது உண்மையில் ஒரே அறிவின் பிரிவுகள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மூளையின் உணர்வு இயக்கமும், கணினியின் இயக்கத்தைப் போன்றதே. கணினிகளில் எண்ணற்ற தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலும், நமக்குத் தேவையான விடைகளை மட்டும் தெரிந்தெடுத்து, நமக்குப் புரியும்படி எளிமைப்படுத்திக் காட்டுகிறது. கணினி மென்பொருள் இறுதியில் என்ன காட்டுகிறதோ அது மட்டும்தான் நம் கண்களுக்குப் புலப்படுகிறது.

அதைப்போல நமது ஒரே அறிவுத் திறன் தெரிவிக்கும் சுவை, ஒலி போன்ற தகவல்களை மட்டுமே நாம் உணர்வதால், அது தனியான அறிவு என்ற மாயை நமக்குள் ஏற்படுகிறது என்று அந்த ஆய்வுக் கட்டுரையில் டான் காட்ஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.