Pages

Monday, October 26, 2015

தீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்கள்: 28ம் தேதி அறிவிப்பு

சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், 28ம் தேதி நடக்கவுள்ளது. அன்றைய தினம் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். தீபாவளி பண்டிகை, நவ., 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, அரசு விரைவு பஸ்களில், 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு துவங்கியது. பண்டிகை செவ்வாய்கிழமை வருவதால், பெரும்பாலானோர், 6ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு முதலே சொந்த ஊர் புறப்பட்டு செல்கின்றனர்.


தமிழகத்தில் ஓடும், 1,037 அரசு விரைவு பஸ்களில், முக்கிய நகரங்களில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது.நவ., 6ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரையிலான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. இதே போல, 11 மற்றும், 12ம் தேதிகளில், நகரங்களுக்கு திரும்புவதற்கான முன்பதிவும் முடிந்து விட்டது. ஏற்கனவே ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டதால், சிறப்பு பஸ்களை நம்பியே பயணிகள் உள்ளனர். 

கடந்தாண்டு, தீபாவளி பண்டிகைக்கு, 10,499 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்தாண்டு, 11,540 பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறி இருந்தனர். இந்நிலையில், தீபாவளிக்கு சிறப்பு பஸ்களை இயக்குவது தொடர்பாக, நேற்று, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில், சென்னை மாநகர், விழுப்புரம், அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, 28ம் தேதி அமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அன்றைய தினம் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். இதற்கான முன்னோட்டமாக, பஸ் நிலையத்தில் ஆய்வு செய்கின்றனர்' என்றார்.

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது?சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, சேலம் மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களிலும், முன்பதிவு முடிந்து விட்டது. தீபாவளிக்கு போதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி கூறியுள்ளார். பண்டிகைக்கு, 15 நாட்களே உள்ள நிலையில், சிறப்பு ரயில்களை காலம் தாழ்த்தாமல் அறிவிப்பது அவசியம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.