Pages

Monday, October 19, 2015

அதிக மார்க் வாங்க ரூ.2.50 போதும்! ஆர்.எம்.எஸ்.ஏ., வினோத முடிவு

சிறப்பு பயிற்சி பெற வரும் மாணவர்களுக்கு, பயணச்செலவாக ஒரு நாளைக்கு ரூ.2.50 மட்டுமே ஒதுக்கி, அதிர்ச்சி தந்துள்ளது ஆர்.எம்.எஸ்.ஏ., பொதுத் தேர்வில் மாநில அளவில், மாணவ, மாணவியரை அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்பதற்காக, மாவட்டம்தோறும், 100 மாணவர்களை தேர்வு செய்து, ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம்) சிறப்பு பயிற்சி தருகிறது. கடந்த தேர்வில், 450 முதல், 470 மதிப்பெண் வரை பெற்றுள்ள மாணவ, மாணவியரை சனி மற்றும் விடுமுறை தினங்களில் வரவழைத்து, காலை முதல் மாலை வரை சிறப்பு பயிற்சி அளிப்பதே திட்டம்.


இதற்காக, மாவட்டம் வாரியாக சிறப்பு பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டு, பள்ளிகள் வாரியாக படிப்பில் சிறந்த, 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பொதுத்தேர்வு வரை, 50 நாட்களுக்கு இப்பயிற்சிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு போக்குவரத்து செலவாக, 100 ரூபாய், சிற்றுண்டி செலவாக, 25 ரூபாய் என மொத்தம், 125 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, 50 நாட்களுக்கு தினமும் பயண செலவாக இரண்டு ரூபாய், சிற்றுண்டி செலவாக, 50 காசு ஒதுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து, ஒன்று அல்லது இரண்டு பஸ்கள் மாறி, பயிற்சி மையத்துக்கு மாணவ, மாணவியர் வர வேண்டும். மாலை வரை பயிற்சி அளிப்பதால், சிற்றுண்டி வழங்குவது அவசியம். 50 நாட்களுக்கு, 125 ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பது எதன் அடிப்படையில் என தெரியவில்லை.

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதியப்பனிடம் கேட்ட போது, நிதி பற்றாக்குறையால், குறைந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், அடுத்த வாரம் சிறப்பு பயிற்சி துவங்கும். தொலைவில் இருந்து வரும் மாணவ, மாணவியரின் சிரமம் போக்க, தாராபுரம், உடுமலை, திருப்பூர் என மூன்று இடங்களில், பயிற்சி மையம் அமைக்கலாமா என ஆலோசித்து வருகிறோம், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.