Pages

Sunday, October 18, 2015

மாணவர்கள் பஸ் செலவுக்கு ரூ.2; சிற்றுண்டிக்கு 50 காசு சிறப்பு பயிற்சி நிதி ஒதுக்கீட்டால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

கல்வி மாவட்ட அளவில், மாநில, மாவட்ட ரேங்க் பெற வைப்பதற்கான சிறப்பு பயிற்சியில், பங்கேற்கும் மாணவர்களுக்கு, வந்து செல்ல பயணப்படி, தினசரி, 2 ரூபாயும், சிற்றுண்டிக்கு, தினசரி, 50 காசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அதிக மதிப்பெண் பெற்ற, 100 மாணவர்களை தேர்வு செய்து, குறிப்பிட்ட மையத்தில் சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாளில் பயிற்சி வழங்கப்படுகிறது. பொதுத்தேர்வு வரை, 50 நாட்களுக்கு, இப்பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.மாவட்ட அளவில், ஒரே மையம் என்பதால், மாணவர்களுக்கு, போக்குவரத்து படியும், மாலை வரை வகுப்பு நடத்த வேண்டும் என்பதால், சிற்றுண்டி செலவுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டை பார்த்த, ஆசிரியர்களுக்கு மயக்கம் வராத குறையாக புலம்புகின்றனர்.ஏனெனில், 50 நாள் பயிற்சி முழுவதும், மாணவர்கள் வந்து செல்ல மொத்தமாக, 100 ரூபாயும், சிற்றுண்டி செலவுக்கு, 50 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம், 25 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தினசரி, 2 ரூபாய் பயணப்படியும், 50 காசு சிற்றுண்டிசெலவினத்துக்கும், மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:கல்வி மாவட்டத்துக்கு, ஒரு மையம் என்பதால், ஒன்று அல்லது இரண்டு பஸ்களை பிடித்து, மாணவ, மாணவியர் பயிற்சிக்கு வர வேண்டியுள்ளது. இதற்கு, இலவச பயண அட்டையையும் பயன்படுத்த முடியாது.
அரசு பஸ்சில் குறைந்த பட்ச டிக்கெட்டே, 3 ரூபாய்; வந்து செல்ல குறைந்தது, 6 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை செலவிட வேண்டிஉள்ளது. ஆனால், அரசு, 2 ரூபாய் ஒதுக்கியுள்ளது. சிற்றுண்டி செலவினத்துக்கு, தினசரி, 50 காசு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு பிஸ்கட் கூட வாங்க முடியாது. இதனால், பயிற்சிக்கு வரும் மாணவர்கள், பஸ்சுக்காக, தினசரி, 20 ரூபாயும், மதிய உணவுக்காக, 50 ரூபாய் வரையும் செலவிட வேண்டியுள்ளது. வசதியில்லாத மாணவர்களுக்கு, இது ஒரு சுமையாகவே உள்ளது. அரசு பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்கள், ஆர்வத்துடன் சிறப்பு பயிற்சிக்கு வரும் போது, அவர்களுக்கு நல்ல முறையில் மதிய உணவும், போக்கு வரத்து செலவையும், அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.